Thursday, May 6, 2010

நார்கோ அனாலிசஸ்

கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் அனுமதியின்றி அவர்களிடம் நடத்தப்படும் நார்கோ அனாலிசஸ், பிரைன் மேப்பிங், பாலிகிராப் போன்ற உண்மை கண்டறியும் சோதனைகள் சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள், தன் மீதுள்ள குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளாமலும் விசாரணைக்கு ஒத்துழைக்காமலும் இருக்கும்போது, அவர்களிடம் இருந்து உண்மையை வரவழைப்பதற்காக நார்கோ அனாலிசஸ், பிரைன் மேப்பிங், பாலிகிராப் போன்ற மருத்துவ ரீதியிலான உண்மை கண்டறியும் சோதனைகளை போலீசார் நடத்தி வருகின்றனர்.
சில நேரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அனுமதியுடன் இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன. அவர்கள் மறுக்கும்போது, நீதிமன்ற அனுமதியுடன் இந்த சோதனைகள் நடக்கிறது. டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த ஆருஷி கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நார்கோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எந்த விவரமும் கிடைக்கவில்லை. முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதான அப்துல் கரீம் தெல்கியிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல விவரங்கள் கிடைத்தன.
அதேபோல, குஜராத்தில் தீவிரவாதி சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் நார்கோ பரிசோதனை செய்ய சிபிஐ முயன்றது. ஆனால், அவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றனர். தற்போது, பாலியல் மற்றும் மோசடி வழக்கில் கைதாகியுள்ள சாமியார் நித்யானந்தாவிடம் நார்கோ பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற உண்மை கண்டறியும் வசதிகள் இந்தியாவில் பெங்களூர், அகமதாபாத் போன்ற சில இடங் களில் மட்டுமே உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை இந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்துகின்றனர்.
வழக்கு தாக்கல்:
இதற்கிடையே, உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்துவது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் வெங்கடேஸ்வர ராவ், குஜராத்தை சேர்ந்த சாந்தா பென், மகாராஷ்டிர சுயேச்சை எம்எல்ஏ அனில் கோட்டே உட்பட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், உண்மை கண்டறியும் சோதனைகள் சட்டப்படி அனுமதி வாங்கி நடத்தப்படுவதாகவும், குற்றத்துக்கான ஆதாரங்களை திரட்ட இந்த சோதனைஅவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் தீர்ப்பு:
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் தல்வீர் பண்டாரி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி நீதிபதிகள் அறிவித்தனர். நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் நீதிபதிகள் கூறியதாவது:
குற்றம்சாட்டப்பட்டவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் அல்லது சாட்சி என யாராக இருந்தாலும் அவரது அனுமதியின்றி நடத்தப்படும் நார்கோ அனாலிசஸ், பிரைன் மேப்பிங், பாலிகிராப் போன்ற உண்மை கண்டறியும் சோதனைகள் சட்டவிரோதமானவை. இவை இந்திய அரசியல் சட்டம் பிரிவு 20(3)க்கு எதிரானது.
மேலும் இதுபோன்ற விசாரணை முறைகளுக்கு ஒருவரை உட்படுத்துவது அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு வழங்கியுள்ள தனி நபர் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகும். இத்தகைய சோதனைகள் சம்பந்தப்பட்டவரின் அனுமதியுடன் நடத்தப்பட்டாலும் அதில் கிடைக்கும் தகவல்களை நீதிமன்றங்களில் சாட்சியாக பயன்படுத்த முடியாது. அடுத்த கட்ட விசாரணைக்கு வேண்டுமானால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வால்பையன் கமெண்ட் : அருமையான தீர்ப்பு
அப்பாவிகள் பாதிக்கபடுவது குறையும்,அதே நேரத்தில் சில பலம் பெருச்சாளிகள் இந்த தீர்ப்பின் மூலம் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தப்பிவிட வாய்ப்புள்ளது

.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger