குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் ஷோபனா சவ்டா (47), இவரதுமகள் பவிகா (26). பவிகாவுக்கு பிறவியிலேயே கருப்பை இல்லை.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் சாரப் கத்வாடியா (28)- வுக்கும் காதல் மலர்ந்தது. அப்போது பவிகாவுக்கு கருப்பை இல்லை என்று தெரிந்தும் சாரப் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தனர்.
இது பற்றி அவர்கள் சூரத்தை சேர்ந்த பிரபல குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் டாக்டர் பூர்ணிமா நட்சன்னியை சந்தித்து ஆலோசனை கேட்டனர். அவரது ஆலோசனைப்படி வாடகைத்தாயை தேடி வந்தனர். ஆனால் அவர்களுக்கு உடனடியாக கிடைக்கவில்லை. இதனால் இருவரும் சோகத்தில் மூழ்கினர்.
இதை அறிந்த பவிகாவின் தயார் ஷோபனா, வாடகைத்தாயாக இருக்க ஒப்புக்கொண்டார். இதை கேட்டதும் பவிகா மகிழ்ச்சி அடைந்தார்.
இதையடுத்து டாக்டர் பூர்ணிமா சாரப்பின் உயிரனுவை பரிசோதனை கூடத்தில் பாதுகாப்பாக வைத்து, பின்னர் அதை நவீன சிகிச்சை மூலம் ஷோபனா வயிற்றில் செலுத்தி கருத்தரிக்க செய்யப்பட்டது.
இதில் அவரது கருப்பையில் 3 குழந்தைகள் உருவானது. இதனால் குஷியான பவிகா தனது கணவரின் கருவை சுமக்கும் தாயாரை நன்றாக கவனித்தார். இந்நிலையில் ஷோபனா சூரத் ஆஸ்பத்திரியில் 3 குழந்தைகளையும் நல்ல முறையில் பெற்றெடுத்தார்.
இதன் மூலம் இந்தியாவிலேயே மகளுக்காக 3 குழந்தைகள் பெற்ற முதல் தாய் என்ற சாதனை படைத்துள்ளார்.
இது பற்றி பவிகா கூறும்போது, பிறந்த முதலே எனக்கு கருப்பை இல்லாததால் யார் என்னை திருமணம் செய்வார்கள் என்ற கவலையில் இருந்தேன். இந்த உண்மை தெரிந்தும் என் கணவர் சாரப் என்னை திருமணம் செய்தார்.
நாங்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற திட்டமிட்டோம். ஆனால் யாருமே கிடைக்கவில்லை. சில வாடகைத்தாய்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்டனர்.
எங்களின் இந்த நிலையை அறிந்த தாயார் “நான் வாடகைத்தாயாக இருந்து உனக்கு குழந்தை பெற்றுத் தருகிறேன்” என்றார். அதன்படியே 3 குழந்தை களை பெற்றுக்கொடுத்தார். என்னை வயிற்றில் சுமந்த என் தாயாரே என் குழந்தைகளையும் சுமந்தது மறக்க முடியாத ஒன்று. அவர் எனக்கு தாயாக கிடைத்திருப்பது நான் செய்த புண்ணியம் என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார்.
ஷோபனா கூறும்போது, என் மகளின் குழந்தைகளை நான் சுமந்ததை பெருமையாக நினைக்கிறேன். நான் பெற்ற இந்த 3 குழந்தைகளையும் என் அன்பு மகளுக்கு பரிசாக அளிக்கிறேன்” என்றார்.
0 comments:
Post a Comment