Tuesday, May 18, 2010

சனீஸ்வர பகவான்

“உங்களுக்கு நூறு ஆயுசு”  ஒருவரை பற்றி பேசும்போதோ, நினைக்கும்போதோ அவரே வந்துவிட்டால் இப்படி சொல்வோம். நல்ல ஆரோக்கியத்துடன் செல்வச் செழிப்புடன் நீண்ட நாள் வாழவேண்டும் என்பது எல்லாருக்கும் ஆசை. இந்த மூன்றையும் அருள்பவர் சனீஸ்வர பகவான். சிவபெருமானைத் தவிர இரண்டு பேருக்குத்தான் ‘ஈஸ்வர’ பட்டம் உண்டு. ஒருவர் விக்னேஸ்வரர். இன்னொருவர் சனீஸ்வரர். கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி மட்டுமே. விக்னேஸ்வரர் என்ற விநாயகர் போலவே சனீஸ்வரரும் தடை, தடங்கல்களை அகற்றி வளமான வாழ்வும் நீண்ட ஆயுளும் வழங்குபவர். மனிதனின் ஆயுள் ஸ்தானத்தை தீர்மானிப்பவராக சனி பகவான் திகழ்கிறார்.
உழைப்புக்கு ஆதாரமாக உள்ள கிரகம் சனி. கடும் உழைப்பாளிகளுக்கு சனி பகவானின் அருள்கடாட்சம் என்றும் உண்டு. சாதாரண தொழிலாளியாக இருப்பவர்களுக்கு மேலும் உழைக்கும் ஆற்றலையும் சக்தியையும் கொடுத்து அவர்களை கோடீஸ்வரர்களாக்கும் வல்லமை சனி பகவானுக்கு உண்டு.
நம் ஜாதகத்தில் சனி பகவான் நன்கு பலமாக இருந்தால் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அதிகாரம், பட்டம், பதவி எல்லாம் தானாக தேடிவரும். ஜாதக அமைப்பை தவிர அவரவர் ராசிக்கு கோசார பலன்களை தருவதிலும் சனீஸ்வரன் வலிமை மிக்கவர். ஏழரை சனி, 4&ல் சனி, 8&ல் சனி என்று ஒவ்வொருவருக்கும் 30 வருடங்களுக்குள் இந்த 3 விதமான கோசார பலன்களை தருகிறார். ஜாதகத்தில் சனி பகவான் பலமாக, யோகமாக இருந்தால் எல்லா துறைகளிலும் கொடிகட்டி பறக்கும் யோகம் உண்டாகும்.
சனியின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: சனி
தேதிகள்: 8, 17, 26
நட்சத்திரம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி
ராசி: மகரம், கும்பம்
நிறம்: கருப்பு
ரத்தினம்: நீலம்
தானியம்: எள்
ஆடை: கருப்பு
சனிக்கு உரிய தேதிகள், கிழமை, நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள், யோகம், பட்டம், பதவி, தொழிலதிபர் போன்ற அம்சங்கள் உண்டாகும். ஜாதகத்தில் சனி பகவான் ஆட்சி, உச்சம் பெற்று பலமாக இருப்பதும் அவசியம்.
பிறந்த லக்னமும் சனி தரும் யோகமும்
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த வகையான யோகங்கள், பலன்களை சனி பகவான் தருவார்?
மேஷ லக்னம்/ராசி & தொழில் துறையால் யோகம். பெரிய பதவியில் அமரும் யோகம்.
ரிஷப லக்னம்/ராசி & தர்ம கர்மாதிபதியாக சனி வருவதால் ராஜாங்க யோகம் கிடைக்கும். உயர்பதவி, பட்டம், தொழில், சொத்து, சுகம் என்று சகல பாக்யங்களும் கிடைக்கும்.
மிதுன லக்னம்/ராசி & பூர்வீக சொத்து, கவுரவ பதவிகள், அரசியல் பிரவேசம் சகல பாக்யங்கள், சகல யோகங்கள்.
கன்னி லக்னம்/ராசி & அஷ்டலட்சுமி யோகம், கோடீஸ்வர யோகம். பிள்ளைகள், மாமன் வகை உறவுகளால் செல்வம், செல்வாக்கு மற்றும் யோகங்கள்.
துலா லக்னம்/ராசி & நிலபுலன்கள், சொத்து சேர்க்கை, தாய் மூலம் யோகம், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள், உயர்பதவி.
விருச்சிக லக்னம்/ராசி & கல்வி மேன்மை, அதிகாரங்கள் நிறைந்த பதவி, உயர்பதவிகள், நில புலன் சேர்க்கை, பூர்வீக சொத்துக்கள்.
தனுசு லக்னம்/ராசி & சொல்லாற்றல், குடும்ப பூர்வீக சொத்துக்களால் அதிர்ஷ்டம்.
மகர லக்னம்/ராசி & கவுரவ பதவிகள் தேடிவரும். தொழில் அதிபராகும் யோகம்.
கும்ப லக்னம்/ராசி & பல வகையிலும் சம்பத்துக்கள், சொத்துக்கள், செல்வம் வந்து சேரும். பட்டம், பதவி, செல்வாக்கு.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் சனி நீச்சம் பெறாமலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமலும், 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமலும் இருக்க வேண்டும்.
வழிபாடு, பரிகாரம்
சனிக்கிழமை விரதம் இருந்து எள் விளக்கேற்றி சனீஸ்வரரை வழிபடலாம். தினமும் காலையில் சாப்பிடும் முன்பு காகத்துக்கு உணவிடலாம்.
‘ஓம் சனைஸ்சராய வித்மஹே
சூர்ய புத்ராய தீமஹி
தந்நோ மந்தப் பிரசோதயாத்’ என்ற சனி காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். ‘ஓம் சம்சம் ரீஉம் சனைச்வர தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
திருநள்ளாறு சனீஸ்வர ஸ்தலத்தில் அன்னதானம் செய்யலாம். நவதிருப்பதிகளுள் பெருங்குளம் சனீஸ்வர ஸ்தலமாகும். கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், மாற்றுத் திறனாளிகள், பார்வையற்றவர்களுக்கு உதவிகள் செய்யலாம்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger