தமிழகத்தில் 454 பொறியியல் கல்லூரிகள்; 1.84 லட்சம் இடங்கள். மாணவர்கள் சேராமல் காலியாகும் இடங்களின் எண்ணிக்கை தான் ஆண்டுதோறும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டில் 30 ஆயிரம் இடங்கள் காலி. உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் இது.
போதுமான அளவுக்கு பொறியியல் கல்லூரிகள், கைநிறைய இடங்கள் இருந்தும் சேர முடியாமல் மாணவர்களை தடுப்பது எது? இந்த கேள்வி சமீபத்தில் சட்டசபையில் சர்ச்சையை கிளப்பியது. கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர்கள் கூட்டத்திலும் அதுவே விவாதப் பொருளானது. விளைவு, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. தகுதி மதிப்பெண் குறைக்கப்படுவதால், நிறைய பேர் தகுதி பெறுகிறார்கள். ஆறுதலான விஷயம். பக்கத்து மாநிலங்களில் எல்லாம் பிளஸ் 2 தேர்வில் பாஸ் செய்தாலே போதும்; பொறியியல் கல்லூரிகளில் படிக்க முடியும். தமிழகத்தில் மட்டும் நேர்மாறான நிலை. இவ்விஷயத்தில் முந்திக் கொண்ட கர்நாடகா, கேரளாவை விரட்டிப் பிடிக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். படிப்படியாக அந்த நிலைமை வரலாம். அதற்கு அச்சாரமாக 5 மார்க் குறைப்பு.
பொதுப் பிரிவினருக்கு 55 சதவீதமாக இருந்த தகுதி மதிப்பெண் 50 ஆகவும், எம்பிசி பிரிவினருக்கு 50 லிருந்து 45 ஆகவும், பிசி பிரிவுக்கு 45&40 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி எஸ்டியினரை பொறுத்தவரையில் 35% போதும் என்ற பழைய நிலைமை நீடிக்கிறது.இந்த 5 சதவீத குறைப்பே நிறைய தரப்புக்கு ஆறுதலை தந்துள்ளது. கடந்த ஆண்டில் வீணாய் போன 30 ஆயிரம் இடங்களில், 20 ஆயிரம் பேருக்காவது இவ்வாண்டில் இடம் கிடைக்கலாம். அதற்கு 5 சதவீத குறைப்பு உதவும் என எதிர்பார்க்கலாம்.
உயர் கல்வி படிக்கும் எண்ணம் குறைய இதுபோன்ற தடைகள்தான் காரணம் என்பது கல்வியாளர்கள் கணிப்பு. அறிவியல், கணிதத்தில் அதிக தேர்ச்சியும் அறிவும் பெற்றிருந்தவர்கள் கூட, மற்ற பாடங்களில் சறுக்கியதால் தகுதி இழந்தவர்களாகி விடுகிறார்கள். அதாவது வெறும் 5 சதவீதத்தில் உயர்கல்வி வாய்ப்பை இழந்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்து விடுகிறார்கள். காலி இடங்களுடன் கல்லூரிகள் காத்துக் கிடக்க வேண்டியதாகி விடுகிறது. அந்த நிலைமை இனி மாறலாம்.
0 comments:
Post a Comment