கடந்த 1970க்கு முன்பு வரை புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை கிடையாது. இந்தியாவில் வானிலை ஆய்வு மையங்கள் 1ஏ, 1பி என்று ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி புயலுக்கு பெயர் வைத்து வந்தன. சாதாரண மக்கள், ‘ஏதோ புயல் வருகிறது; போகிறது’ என்று இருப்பார்கள். புயல்களுக்கு பெயர் வைத்து அழைக்கப்பட்ட பிறகுதான் பாமர மக்களும் அதை எளிதாக நினைவில் வைத்துக் கொள்வதுடன், அந்த புயல் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் நிலையும் உருவானது.
1970ல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டின்போது, பசிபிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி அந்த பகுதியை சேர்ந்த நாடுகளை உலக வானிலை அமைப்பு முதல் முறையாக கேட்டுக் கொண்டது. அதேபோல், வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி, 2000ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு ஆசிய, பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் மாநாட்டில் இந்த பகுதியில் அமைந்துள்ள நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
அதன்படி, வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகளும் சேர்ந்து 64 பெயர்களை கொண்ட பட்டியலை தயாரித்தன. வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்த பட்டியலில் இருந்து ஒவ்வொரு பெயராக வைக்கப்பட்டு வருகின்றன. ஒருமுறை ஒரு நாடு தேர்வு செய்த பெயர் வைக்கப்பட்டால், அடுத்த முறை வேறு நாடு தேர்வு செய்த பெயரில் புயல் அழைக்கப்படுகிறது. இதுபோல், 8 நாடுகளின் பெயர்களும் சுழற்சி முறையில் வைக்கப்படுகின்றன. அதன்படி, நேற்று கரை கடந்த புயலுக்கு பாகிஸ்தானின் ‘லைலா’ பெயர் வைக்கப்பட்டது. இதற்கு முன்பாக, ஓமன் பரிந்துரை செய்த பெயரான ‘வார்டு’ வைக்கப்பட்டது.
புயல் உருவாகி கரை கடந்ததும், பட்டியலில் இருந்து அந்த பெயர் நீக்கப்படுகிறது. பிறகு, அந்த நாட்டின் சார்பில் புதிய பெயர் பரிந்துரை செய்யப்படுகிறது. கடைசியாக, 8 நாடுகளின் சார்பில் புயல்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களின் விவரம் வருமாறு:
நர்கீஸ் (பாகிஸ்தான்), ரஷ்மி (இலங்கை), காய்முக் (தாய்லாந்து), நிஷா (வங்கதேசம்), பிஜ்லி (இந்தியா), அய்லா (மாலத்தீவு), பியான் (மியான்மர்), வார்டு (ஓமன்).
அடுத்த புயல் பெயர் ‘பண்டு’
வடக்கு இந்தியப் பெருங்கடலில் அடுத்து எப்போது புயல் ஏற்படும் என்பது தெரியாது. ஆனால், அப்படி ஒரு புயல் உருவானால் அதற்கு வைக்கப்பட உள்ள பெயர் இப்போதே தயாராக இருக்கிறது. அதன் பெயர் ‘பண்டு’. புயலுக்கு பெயர் வைக்கும் சுழற்சியில், பாகிஸ்தானுக்கு அடுத்தப்படியாக இலங்கைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நாடு பரிந்துரை செய்துள்ள பெயர்தான் ‘பண்டு.’
0 comments:
Post a Comment