Saturday, May 15, 2010

கல்வி வியாபாரம்

அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை எதிர்த்து தனியார் பள்ளி நிர்வாகங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பள்ளிகளில் அநியாய கட்டணம் வசூலிப்பது நாடறிந்த விஷயம். தமிழகத்தில் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் நியாயமான கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளும் இருக்கக்கூடும். நிர்வாகத்துக்கு நியாயமாக தோன்றுவதெல்லாம் பெற்றோருக்கும் அப்படி தெரிவதில்லையே?
            கல்வி வியாபாரமாக மாறி ஆண்டுகள் ஓடிவிட்டன. எந்த வியாபாரத்திலும் குறிக்கோள் ஒன்றுதான். லாபம் ஈட்டுவது. மக்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், அநேக நிர்வாகங்கள் அதிகபட்ச லாபத்தை குறிக்கோளாக்கிக் கொண்டன. நன்கொடை வசூலிக்க விதித்த தடையை தாண்ட புதுப்புது வழிகளை கண்டுபிடித்தனர். சென்னையில் ரயிலேறி கன்னியாகுமரி சென்று, அங்கிருந்து பஸ் பிடித்து திருவனந்தபுரம் போய் ஜூ, கோயில், பீச் பார்த்துவிட்டு மறுநாள் திரும்பும் சுற்றுலாவுக்கு தலா ஆறாயிரம் கட்டணம் வசூலித்தால் பெற்றோர் மனம் குமுறாதா? அடிப்படை வசதிகள் செய்துதர தனித்தனியாக கட்டணம் வசூல் செய்த பள்ளிகள் பல உண்டு. அரசுக்கு வந்து குவியும் புகார்களை பட்டியலிட்டால் பள்ளி நிர்வாகிகளை மக்கள் வேறு மாதிரி பார்ப்பார்கள்.
இந்த நிலைக்கு வந்த பிறகே அரசு நடவடிக்கையில் இறங்கியது. தடாலடி உத்தரவு பிறப்பிக்கவில்லை. நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கட்டண நிர்ணயம் செய்துள்ளது. இந்த கட்டணம் வசூலித்தால் ஆசிரியர்களுக்கு 30 முதல் 40 ஆயிரம் சம்பளம் நாங்கள் எப்படி கொடுக்க முடியும் என்று சில நிர்வாகிகள் கவலைப்படுவதை பார்த்து ஆசிரிய சமுதாயம் வாயடைத்து நிற்கிறது. பெரும்பாலான தனியார் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் 15, 20 ஆயிரம் வாங்கிக் கொண்டு காலத்தை ஓட்டும் நிலையில், அதைவிட இரு மடங்கு தரும் பள்ளிகளை அடையாளம் காட்டினால் பாராட்டு விழா நடத்தலாம்.
      மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருக்கும் சூழலில், பள்ளிகளை திறக்க மாட்டோம் என நிர்வாகிகள் மிரட்டுவதில் நியாயம் இல்லை. குறைகளை சரி செய்துகொள்ள இது வாய்ப்பு. அதை விடுத்து, கட்டாய இலவச கல்வி சட்டம் அமுலுக்கு வந்துள்ள நேரத்தில் அரசுடன் மோதலுக்கு ஆயத்தமாவது நிர்வாகங்களுக்கு இழப்பாக முடியும். மாணவர்களின் படிப்பு பாழாவதை எந்த அரசும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger