ஆந்திராவில் வலுவிழந்து கரை கடந்த ‘லைலா’, மசூலிப்பட்டினம் அருகே நிலை கொண்டுள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் 11,860 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் தவிக்கின்றன.
கடந்த 17ம் தேதி வங்கக் கடலில் உருவான ‘லைலா’ புயல், 3 நாள் மிரட்டலுக்குப் பிறகு ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பாபட்லாவில் நேற்று முன்தினம் மாலை கரை கடந்தது.
இப்போது அது, மசூலிப்பட்டினத்துக்கு அருகே கடற்கரை ஓரத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால், அது மீண்டும் கடலுக்கு திரும்பி புயலாக தாக்கும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது. வலுவிழந்து கரை கடந்ததால் அதன் சீற்றம் சிறிது மட்டுமே குறைந்துள்ளது.
இதனால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழையும், பலத்த காற்றும் தொடர்கிறது. கிழக்கு கோதாவரி உட்பட சில மாவட்டங்கள் வெள்ளக்காடாகி உள்ளன. 5.800 ஹெக்டேர் விவசாயப் பயிர்களும், 6060 ஹெக்டேர் தோட்டப் பயிர்களும் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.
பிரகாசம் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திலும், மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, நெல்லூர் மாவட்டங்களில் ரயில், தரை மற்றும் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டு ள்ளன. ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக செல்கின்றன. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் பல முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் உடைந்து கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் தவிக்கின்றன. 1,500 மீனவர் படகுகள் சேதம் அடைந்துள்ளன. புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடலோர மாவட்டங்களிலும், தெலுங்கானா பகுதியில் சில இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், மணிக்கு 95 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மழையால் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளால் 37 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிருஷ்ணா மாவட்டத்தில் 7 பேரும், நெல்லூரில் 4 பேரும், குண்டூரில் 3 பேரும் உயிர் இழந்தனர். ஆந்திராவில் மழை வெள்ளத்துக்கு ஒரே நாளில் 37 பேர் உயிர் இழந்துள்ளனர்.
0 comments:
Post a Comment