Tuesday, May 18, 2010

மீண்டும் ஒரு சோகம்

சட்டீஸ்கரில் மீண்டும் தாக்குதல் நடந்திருக்கிறது. நக்சலைட்கள் கண்ணிவெடியால் பஸ்ஸை தகர்த்துள்ளனர். 50 பேர் உடல் சிதறி இறந்திருக்கிறார்கள். ஒரு மாதம் முன்பு மத்திய ரிசர்வ் போலீஸ் வாகனங்களை சுற்றி வளைத்து கோர தாண்டவம் ஆடினர். 72 பேர் சிதைந்தனர். நேற்று தகர்க்கப்பட்டது பயணிகள் பஸ்.
ஆயுதம் இல்லாத நிராயுதபாணிகளை இவர்கள் கொல்வதில்லை என்று சில அறிவுஜீவிகள் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அது பொய் பிரசாரம் என்பதை நேற்றைய சம்பவம் காட்டிவிட்டது. நக்சலைட் வேட்டைக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் சிலரும் அந்த பஸ்ஸில் பயணம் செய்தார்கள் என்பது கண்ணிவெடியை நியாயப்படுத்த முடியாது.
கண்ணிவெடிகளாலும் துப்பாக்கி குண்டுகளாலும் ஒரு அரசாங்கத்தை பணியவைக்க முடியாது என்பது இந்த அறிவாளிகள் மூளைக்கு மட்டும் எட்டுவதில்லை. உலகம் முழுவதும் திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகிறது. அண்டை நாடுகளிலும் பார்த்தோம். ஆனாலும் இவர்களுக்கு ரத்த வெறி கண்ணை மறைக்கிறது. குறைகள் மலிவாகவும் கோரிக்கைகள் நியாயமாகவும் இருந்தால்கூட வன்முறை வழியில் ஒருபோதும் தீர்வு கிடைக்காது. அமைதியை விரும்பும் மக்களே என்றும் எங்கும் பெரும்பான்மையாக இருப்பார்கள். ஆயுத வழியை நம்புவோர் மிகவும் குறைவு. அந்த சிறு கூட்டம் பெரும்பான்மையை உதறித்தள்ளி விட்டு தனது லட்சியத்தை அடைவது சாத்தியமே இல்லை.
உயிரைக் கொடுத்தேனும் இலக்கை அடைவோம் என்பது கைதட்டலுக்காக கவிஞர்கள் தீட்டும் சொல்லோவியம். அதை இரவல் வாங்கி ஒருவன் உச்சரிக்க, உடனே நரம்பு புடைத்து ஒரு கூட்டம் காட்டில் பயிற்சி பெற பின்தொடர்கிறது. இவர்களின் அடாவடிக்கு அரசுகள் முழு பதிலடி தருவதில்லை. காரணம், அதிரடியான நடவடிக்கையில் அப்பாவிகளும் பலியாவார்கள். ஆனால், தீவிரவாத தலைவர்கள் அரசை அந்த நிலைக்கு தள்ளுவதில் குறியாக இருப்பார்கள். நேற்றைய சம்பவத்தில் அந்த முத்திரை தெரிகிறது.
இனி அரசு முழு பலத்தையும் பிரயோகிக்க அனைத்து தரப்பிலும் நிர்ப்பந்தம் உருவாகும். அதை உதாசீனம் செய்ய முடியாது. அப்போது, தீவிரவாதிகளோடு அவர்கள் கேடயமாக பயன்படுத்தும் அப்பாவிகளும் பலியாக நேரிடுவது தவிர்க்க முடியாத சோகம்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger