ஆபீஸ் போகும் பெண்கள், ‘காஸ்ட்லி’யான உடை உடுத்தி, லிப்ஸ்டிக் போட்டுப் போவதேன்... தெரியுமா? அப்படி போனால் தான் முழு ஈடுபாட்டோடு வேலை செய்து சாதிக்கின்றனர்; இப்போது அந்த சவாலை ஆண்கள் முறியடித்து வருகின்றனர்.
என்ன வியப்பாக இருக்கிறதா, உண்மை தான். ஆம், அவர்களும் நாகரிக பெண்களை போல, விலை அதிகமாக உள்ள உடைகளை வாங்கி நேர்த்தியாக ‘டிரஸ்’ செய்ய ஆரம்பித்து விட்டனர். அதனால், அவர்களின் வேலைத்திறன் அதிகரித்து விட்டதாம்.
சென்னை, பெங்களூர், அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, புனே, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு பல்வேறு துறை ஊழியர்களை அமர்த்தித்தரும், வேலை வாய்ப்பு தரும் ‘டைம் லீஸ்’ நிறுவனம் சமீபத்தில் வித்தியாசமான சர்வேயை நடத்தியது.
இந்த நகரங்களில் உள்ள 21 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண் ஊழியர்கள், அவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவன நிர்வாகிகளிடம் சர்வே நடத்தப்பட்டது.
சர்வேயில் தெரியவந்துள்ள சில வித்தியாசமான தகவல்கள்:
ஊழியர்கள் அணியும் உடைக்கும், அவர் பணி திறமைக்கும் தொடர்பு உள்ளது. நேர்த்தியாக உடை அணியும் ஊழியர்களிடம் படிப்படியாக வேலையில் முன்னேற்றம் காணப்படுகிறது என்று நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள், மூத்த அதிகாரிகள் கூறினர். இதை ஊழியர்களும் ஆமோதித்தனர்.
இந்த கருத்தை 89 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டனர். மேலும், இவர்களில் நான்கில் மூன்று பங்கு ஊழியர்கள், ‘நாங்கள் நேர்த்தியாக உடை அணிய ஆரம்பித்ததில் இருந்து, வேலை நன்றாக செய்ய முடிகிறது. அதற்கான ஆர்வமும் அதிகரிக்கிறது உண்மை தான்’ என்று ஒப்புக்கொண்டனர்.
தங்களை அழகாக காட்டிக்கொள்வதில் பெண்களை ஆண்கள் முந்திக்கொள்ள தயாராகி விட்டனர் என்றும் சர்வேயில் தெரிய வந்துள்ளது. மாத சம்பளத்தில் கணிசமான தொகையை புதிய உடைகள் வாங்கவும், பியூட்டி பார்லர் போகவும் பெண்கள் செலவழிப்பது தெரிந்தது தான். ஆண்களும் இப்போது பெண்களை போல, தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். 74 சதவீதம் ஆண்கள் இதை ஒப்புக்கொண்டனர்.
டிரஸ் அணிந்து ஆபீஸ் வருவதில் விதிமுறைகளை எல்லா நகரங்களிலும் உள்ள நிறுவனங்கள் கடைபிடிக்கின்றன. சென்னையில், 60 சதவீத தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்காக உடை விஷயத்தில் தனி விதிகளை பின்பற்றுகின்றன.
உடை விஷயத்தில் தனி விதிகளை பின்பற்றுவது நல்லது தான். ஆனால், மேல் அதிகாரிகள், வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பு பணிகளில் உள்ள ஊழியர்களுக்கு மட்டும் பின்பற்றலாம் என்று 44 சதவீதம் பேர் தெரிவித்தனர்.
‘உடையை நேர்த்தியாக அணிந்து வருவதால், பணியில் கவனம் செலுத்த முடிவது சரிதான்’ என்று பெரும்பாலோர் கூறினாலும், அவர்களில் சிலரிடம் வேறு சில குறைகளும் உள்ளதும் தெரியவந்தது. ‘சில ஊழியர்கள் நேர்த்தியாக உடை அணிந்து வந்து மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்கி விடுகின்றனர்; அவர்கள் வேலை செய்வதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை’ என்று 54 சதவீதம் ஊழியர்கள் கூறினர்.
இப்படி சிலர் கூறுகின்றனர் என்றால், 72 சதவீதம் ஆண் ஊழியர்களின் ஒரு மித்த கருத்து என்ன தெரியுமா? ‘எங்களால் நேர்த்தியாக உடை அணிந்து வந்தால் நன்றாக வேலை செய்ய முடிவது உண்மை தான். ஆனால், பெண்களில் சிலர் ஸ்கர்ட் மற்றும் மேல் சட்டை அணிந்து வருகின்றனர். அவர்களால் எங்கள் கவனம் சிதறுகிறது’ என்று தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment