ரிசர்வ் வங்கி அட்வைஸ்:
வெளிநாட்டு, உள்நாட்டு பண மோசடி பேர்வழிகளிடம் முதலீட்டாளர்கள் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்கும்படி ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக, வங்கிகளையும் அது கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இ&மெயில் முகவரிகள், போன் எண்களைத் தெரிந்து கொள்ளும் பண மோசடி நிறுவனங்கள், மக்களை ஏமாற்றி வருவதாக புகார்கள் அதிகரித்துள்ளன. அதிர்ஷ்ட குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தாங்களாக இ&மெயில் அனுப்புகின்றனர். எஸ்எம்எஸ், கடிதங்கள் வழியாகவும் இதுபோன்ற கவர்ச்சி வசனங்களை அனுப்புகின்றனர்.
கோடிக்கணக்கான ரூபாயைப் பெற பரிவர்த்தனைக் கட்டணம், பிராசசிங் கட்டணம், வரிகள், பணமாற்று கட்டணம் என்ற பல பெயர்களில் பரிசுப் பணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கட்டுமாறு மோசடி நிறுவனங்கள், தனிநபர்கள் தெரிவிக்கின்றனர். அதை நம்பி லட்சக்கணக்கான பணத்தை பலர் இழந்துள்ளனர்.
மோசடி பேர்வழிகளில் பலர் ரிசர்வ் வங்கி கடிதப் பக்கங்களையும் (லெட்டர்ஹெட்), உயரதிகாரிகள் கையெழுத்தை போலியாகவும் இ&மெயிலில் அனுப்பி மக்களை நம்ப வைக்கின்றனர். ஏமாறுவோரிடம் குறிப்பிட்ட தொகையை வங்கிக் கிளையில் செலுத்தச் செய்கின்றனர். வெளிநாடுகளைச் சேர்ந்த மோசடி நிறுவனங்கள், தனிநபர் பெயரில் தொடங்கப்படும் இதுபோன்ற வங்கிக் கணக்குகளில் அப்பாவிகள் டெபாசிட் செய்யும் தொகையை உடனுக்குடன் எடுத்து, ஏமாற்றி விடுகின்றனர். இதுபோல ஏமாற்றும் நோக்கத்துடன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்படுவது தெரிய வந்துள்ளது. அந்த கணக்குகளில் நடைபெறும் பண பரிவர்த்தனை பற்றி கூடுதல் கவனம் செலுத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்குகளில் நம்நாட்டினர் யாரேனும் மக்களிடம் ஏமாற்றி வசூலித்த பணத்தை டெபாசிட் செய்வது அன்னியச் செலாவணி நிர்வாக சட்டம் 1999 மற்றும் பண மோசடி தடுப்பு சட்டத்தின்படி குற்றமாகும். இதுபோன்ற நபர்களிடம் வங்கிகள் எச்சரிக்கையாக இருப்பதுடன், உடனுக்குடன் புகார் அளித்து மக்கள் ஏமாறுவதைத் தடுக்க வேண்டும்.
வங்கிகள் கணக்கில் 1 லட்சம் கோடி குறையும்:
மூன்றாம் தலைமுறை போன் சேவைக்கான ஏலத் தொகை, அட்வான்ஸ் வரி ஆகியவற்றுக்காக நிறுவனங்கள் அதிக பணம் எடுப்பதால் வங்கிகளின் இருப்பு திடீரென ரூ.1 லட்சம் கோடி குறைகிறது. அதை சமாளிக்க ரிசர்வ் வங்கி உதவ முன் வந்துள்ளது.
நாட்டின் முன்னணி போன் நிறுவனங்கள், 3ஜி தொழில்நுட்ப போன் சேவைக்கான ஏலம் எடுத்துள்ளன. அதன் மொத்த தொகை ரூ.67,000 கோடி. ஏலத் தொகையை நாளை மறுநாளுக்குள் (31ம் தேதி) செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தவிர, கம்பெனிகளின் அட்வான்ஸ் வரி செலுத்தவும் அதுவே கடைசி நாள்.
இதனால், இந்த வாரத்தில் பெரிய கம்பெனிகளின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.1 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட உள்ளது. இதை சமாளிக்க வங்கிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது.
போன் இணைப்பு எண்ணிக்கை 1.67 கோடியாக உயரும் :
ஏப்ரல் மாதத்தில் போன் இணைப்பு எண்ணிக்கை 1.67 கோடி உயர்ந்ததாக டிராய் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை மார்ச் இறுதியில் 62.13 கோடியாக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 1.67 கோடி உயர்ந்து, 63.8 கோடியானது. இதன் வளர்ச்சி வீதம் 2.7 சதவீதம். நாட்டின் மக்கள்தொகையில் 54.1 சதவீதத்தினரிடம் போன் உள்ளது. இதேபோல, ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ உட்பட செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை மார்ச்சில் 58 கோடியில் இருந்து, ஏப்ரலில் 60 கோடியாக உயர்ந்தது.
0 comments:
Post a Comment