மங்களூர் விமான விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 72 லட்சம் ரூபாய்க்கு குறையாமல் நிவாரண நிதி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளின் நாசவேலையால் உயிர் இழந்த ரயில் பயணிகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் கொடுக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மனித உயிருக்கு விலை மதிப்பிட முடியாது. என்றாலும், அகாலம் மரணம் அடைந்தவர் யார், என்ன பணி, ஈட்டிக் கொண்டிருந்த வருமானம் எவ்வளவு, சம்பாதிக்கக்கூடிய காலத்தில் இன்னும் எவ்வளவு ஈட்டியிருப்பார் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு அவரது இழப்பால் தவிக்கும் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு முடிவு செய்வது பெரும்பாலான நாடுகளில் நடைமுறையாக இருந்து வருகிறது. எனினும், இன்சூரன்ஸ் நிறுவனத்தை பொருத்தே இந்த ஏற்பாட்டின் உண்மையான பலன் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு கிடைக்கும்.
இந்தியாவில் இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சந்தா வசூலிப்பதில் காட்டும் ஆர்வத்தை பணம் பட்டுவாடா செய்வதில் காட்டுவதில்லை. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை கோர்ட் கோர்ட்டாக அலைக்கழித்து, நீதிபதியால் குட்டு வாங்கிய பிறகே காப்பீட்டு தொகையை வழங்குகின்றன. உயிரையோ பொருளையோ இன்சூர் செய்ய மக்கள் தயங்குவதற்கு இது முக்கிய காரணம்.
விமான பயணிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை சேர்ந்தது. அந்த நிறுவனம் விமானத்துக்கும் அதில் பயணம் செய்பவர்களுக்கும் கணிசமான அளவில் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்திவிடுவதால் அசம்பாவிதம் நேர்ந்த உடனே முதல் கட்டமாக ஒரு தொகையும் விசாரணை முடிவதற்குள் மீதி தொகையும் வாரிசுகளுக்கு கிடைத்துவிடுகிறது. ரயில், பஸ் பயணிகளுக்கு அந்த வாய்ப்பு இல்லை. போக்குவரத்து நிறுவனம், அரசு மனமிறங்கி கொடுப்பதுதான் கிடைக்கிறது.
உயிரிழப்பு ஈடு செய்ய முடியாதது என்றாலும், வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சி நின்றுவிடாது என தெரியும்போது, இழப்பால் வருந்தும் குடும்பம் நிலைகுலையாமல் தன்னை தேற்றிக் கொள்ள வழி பிறக்கும். இந்த அடிப்படையில் உயிர்களுக்கு இழப்பீடு தருவதில் பேதங்களை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 comments:
Post a Comment