Saturday, May 22, 2010

மங்களூர் விமான விபத்து

துபாயில் இருந்த மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. உயரமான இடத்தில் இருந்த ரன்வேயில் இருந்து விலகி, காம்பவுண்டை உடைத்துக் கொண்டு 200 அடி பள்ளத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில் 166 பேர் உடல் கருகி பலியாயினர். மீட்புப் பணிகள் அசுர வேகத்தில் நடக்கிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் போயிங் விமானம் (ஐஎக்ஸ்&892) 169 பேருடன் துபாயில் இருந்து இன்று காலை மங்களூர் வந்தது. மங்களூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் மலைப்பகுதியில் அமைந்துள்ள பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் காலை 6.30 மணிக்கு விமானம் தரையிறங்கியது. மலைப் பகுதியில் அமைந்துள்ள உயரமான (டேபிள்டாப்) ஓடுபாதையில் இறங்கிய விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. ரன்வேயில் இருந்து விலகிய விமானம், ஏர்போர்ட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்துக் கொண்டு 200 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. மோதிய வேகத்தில் விமானத்தில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் விமானம் முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
விமானம் விபத்தில் சிக்கியது தெரிந்ததும் உடனடியாக மீட்புக் குழுவினரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்றனர். போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. அருகில் நெருங்கவே முடியாத அளவுக்கு தீ எரிந்து கொண்டிருந்தது.
விமானத்தின் வால் பகுதி தவிர மற்ற பகுதிகள் முழுவதும் எரிந்து சாம்பலானது. பலத்த தீக்காயத்துடன் துடித்துக் கொண்டிருந்த சிலரை தீயணைப்பு படையினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 162 பேரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பெரும்பாலான பயணிகள் சீட்டில் உட்கார்ந்த நிலையிலேயே கருகிக் கிடந்தனர். இறந்தவர்களில் நசீம் அஸ்ரப் (37), நயீஜான் (25), ரசாத் (7 மாதம்), ஜுலேகா (43), இமாஜின் (4) ஆகிய 5 பேர் மட்டும் முதல்கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த ஒரு மணி நேரத்தில் 60 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 25 ஆம்புலன்ஸ்கள், 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இறந்தவர்களில் 23 குழந்தைகள், 6 விமான சிப்பந்திகளும் அடங்குவர். விமானம் தரையிறங்குவதற்கு 10 நிமிடம் முன்பே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக, எந்த தகவலையும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு பைலட் தெரிவிக்கவில்லை. இதனால்,விபத்துக்கான காரணம்
உடனடியாக தெரியவில்லை.மங்களூர் விமான விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் 16 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சவூதியை சேர்ந்த இளம் தொழில் அதிபர் சமீர் என்பவரின் பாட்டி இறுதிச்சடங்கில் பங்கேற்க  வந்தபோது விபத்தில் சிக்கி பலியாகிவிட்டனர். பாட்டி இறந்த துக்கத்தில் இருந்த சமீருக்கு ஒரே நேரத்தில் 16 உறவினர்களை பறிகொடுத்தது தாங்கிக் கொள்ள முடியாத சோகமாகி விட்டது.

161 பேரை பலி கொண்ட விமானத்தை ஓட்டிய விமானியின் பெயர் லட்கோ குளுசிகா. 55 வயதான இவர் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் இங்கிலாந்தில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். விமானம் ஓட்டுவதில் இவர் நன்கு அனுபவம் பெற்றவர். விபத்துக்குள்ளான விமானம் வாங்கப்பட்டு 2 ஆண்டுகளே ஆகிறது. எனவே விமானத்தில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த கருப்புப்பெட்டியை தொழில்பாதுகாப்புப்படை வீரர்கள் தேடிவருகிறார்கள். அதில் விமானி கடைசியாக பேசியது எல்லாம் பதிவாகி இருக்கும். கருப்பு பெட்டி கிடைத்தால் விபத்துக்கான உண்மையான காரணங்கள் தெரிய வரும்.







0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger