Tuesday, May 25, 2010

வைகாசி விசாகம் 27.05.2010

இரவு நேரத்தில் வானத்தை பார்த்தால் பல கோடி நட்சத்திரங்கள் தெரியும். ஆனாலும், இவற்றில் இருந்து அஸ்வினி, பரணி என 27 நட்சத்திரங்களை மட்டுமே சப்தரிஷிகளும் யோகீஸ்வரர்களும் நமக்கு தேர்வு செய்து தந்திருக்கிறார்கள். இவை ஒவ்வொன்றும் ஒரு வடிவம் கொண்டவை. உதாரணமாக, நூறு நட்சத்திரங்கள் கொண்ட சேர்க்கையே ‘சதயம்’ எனப்படுகிறது. இப்படி ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு குணாதிசயம், சிறப்பம்சம் உண்டு. கடவுள்களின் அவதாரங்கள் பல நட்சத்திரங்களில் நடந்திருக்கின்றன. கிருஷ்ண அவதாரத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணன் அவதரித்தார். ராமாவதாரத்தில் அதே பரந்தாமன் ஸ்ரீராமன் என்ற பெயரில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். இதுபோல கடவுள் அவதாரத்தில் பெருமை பெற்ற நட்சத்திரங்களில் ஒன்று விசாகம்.
6 நட்சத்திரங்கள் இணைந்த அமைப்பே விசாக நட்சத்திரம். அதனால், ஆறுமுகப் பெருமானாகிய கந்தன் இந்த நட்சத்திரத்தில் உதித்ததாக ஐதீகம். இதையே திருப்புகழ் ‘இன்சொல் விசாகா கிருபாகரா’ என்று குறிப்பிடுகிறது. வைகாசி விசாகம் 27.05.2010
வியாழக்கிழமை அன்று வருகிறது.
முருகனுக்கு உகந்த ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரம் போல வைகாசி விசாகமும் மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.
முருகப் பெருமான் அவதரித்த தினம் என்பது மட்டுமல்லாமல் இந்த நட்சத்திரத்துக்கு மேலும் பல சிறப்புகள் இருக்கின்றன. அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை சிவபெருமான் வழங்கிய நாள். புத்தர் பெருமான் அவதரித்த நாள் (புத்த பூர்ணிமா). ‘வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்’ என்று போற்றப்படும் நம்மாழ்வார் அவதரித்த தினம். இப்படி பல சிறப்புகள் கொண்டது வைகாசி விசாகம்.
ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் கோயில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் மிகவும் உகந்த நாள். இங்கு சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் பெருமாள் இந்த நாளில் மட்டுமே சந்தனக் காப்பு நீக்கி அருள் பாலிக்கிறார். அதற்கு அடுத்த நாளே 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி மீண்டும் காப்பு தயாராகி, சுவாமி மீண்டும் அதற்குள் சென்றுவிடுவார்.
தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான்தான் சாஸ்திர ஜோதிடக் கலைக்கும் அதிபதி. எனவே, அவரது அவதார திருநாளாம் இந்த நன்னாளில் அவரை போற்றி, துதிசெய்து அபிஷேக, ஆராதனைகள் செய்து வர சகல சங்கடங்களும் நீக்கி வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் அருள்வார். மனமுருக பிரார்த்தனை செய்தால் இறைவன் அருள் கட்டாயம் கிடைக்கும்.
சிவகுமாரனாகவும் திருமாலின் மருமகனாகவும் விளங்கும் ஞானபண்டிதன் முருகப் பெருமான் அவதரித்த விசாகம் குருவின் நட்சத்திரமாகும். எனவே குருதிசை, குருபுத்தி, குருவால் ஏற்படும் தடங்கல்கள் எல்லாம் நீங்க குரு ஸ்தலங்களில் பரிகாரங்கள் செய்து வழிபடலாம். குரு ஸ்தலமான திருச்செந்தூரில் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி, குருவின் அம்சமாகவே அருள்பாலிக்கிறார். வைகாசி விசாக தினத்தன்று அங்கு பரிகார பூஜைகள் செய்தால் பகை தீரும். திருஷ்டி, தோஷங்கள் விலகும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்டுவந்த சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும். அருகே உள்ள முருகன் கோயிலுக்கு சென்றும் வழிபாடுகள் செய்யலாம். வைகாசி விசாக தினத்தில் முருகனை வணங்கி சகல யோகங்களும் பாக்யங்களும் பெறுவோமாக.

1 comments:

Sivagurunathan said...

Beautiful explanation on stars.....Thank You for valuable informations....

Related Posts with Thumbnails
 

Blogger