அம்பானி சகோதரர்கள் இடையே இருந்துவந்த பகைமை முடிவுக்கு வந்துவிட்டது. இது முகேஷ் அம்பானிக்கும் அனில் அம்பானிக்கும் இடையிலான தனிப்பட்ட சண்டையாக இல்லாமல், இரண்டு மிகப் பெரிய தொழில் குழுமங்களுக்கு இடையிலான சண்டையாக நீடித்ததால், பங்கு முதலீட்டாளர்களில் தொடங்கி, சில நேரங்களில் பங்குச் சந்தையே கூட பாதிக்கப்பட்டு வந்தது. இப்போது சண்டை முடிவுக்கு வந்ததால் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம். கடந்த நிதியாண்டில் மட்டும் 29 ஆயிரம் கோடி ரொக்க லாபம் ஈட்டிய நிறுவனம். அனிலுக்கு சொந்தமான ‘அடாக்’ குழுமம், நிதி, தொலைத் தொடர்பு, பொழுதுபோக்கு போன்ற வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் நிறுவனங்களைக் கொண்டது. பாகப் பிரிவினை நடந்து முடிந்த கடந்த 5 ஆண்டுகளில் இந்த இரு சகோதரர்களும் நிறுவன வளர்ச்சிக்கு செலவிட்ட நேரத்தை விடவும் அடுத்தவர் வளர்ச்சியை தடுக்கவும் கோர்ட், கேஸ் என பிரச்னை கொடுக்கவும் செலவிட்ட நேரம்தான் அதிகம். இதற்கு முத்தாய்ப்பாக எரிவாயு விலை நிர்ணய பிரச்னை வந்தது. இந்த நிலையில்தான் அம்பானிகளின் தாய் கோகிலா பென் இந்தப் பிரச்னையில் தலையிட்டார். எங்கு, எப்போது பேச்சு வார்த்தை நடந்தது என்ற எந்த விவரமும இல்லை. திடீரென இரு சகோதரர்களும் இணைந்து, சமாதான அறிக்கை வெளியிட்டனர். இந்திய தொழில் உலகமே நிம்மதி பெருமூச்சு விட்டது. புதிய ஒப்பந்தப்படி, ஒருவர் தொழிலில் மற்றொருவர் ஈடுபடக்கூடாது என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் கோடி புதிய முதலீடுகள் தொழில் துறையில் குவியும். போட்டிபோட்டுக் கொண்டு இரு தொழில் குழுமமும் வளரும். சிறு முதலீட்டாளர்களை அதிகம் கொண்ட இரு ரிலையன்ஸ் குழுமங்களின் முதலீட்டாளர்களும் அதிக பலனை பெறுவார்கள். போட்டி, பொறாமையை மறந்து தொழிலில் கவனம் அதிகரிக்கும். அதனால்தான் பிரதமர், நிதி அமைச்சர், நிறுவன விவகாரத் துறை அமைச்சர் என அனைவருமே இந்த ஒற்றுமை அறிக்கையை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வளர்ச்சிக்கு போட்டி அவசியம். போட்டி வரும்போதுதான் பொருளாதாரமும் வளரும். அதை இனி எதிர்பார்க்கலாம்.
Tuesday, May 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment