Monday, May 17, 2010

தாய்லாந்து போராட்டம்

 தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அரசுக்கு எதிராக கடந்த 2 மாதங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் சிவப்பு ஆடையுடன் பாலத்திலும், வீதியிலும் தங்கியிருந்து அமைதியான முறையில் பிரதமர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரதமர் அபிசித் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திதான் கடந்த 2 மாதமாக போராட்டம் நடக்கிறது. ராணுவம் சுட்டு இதுவரை 50 பேர் இறந்துள்ளனர். 1600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்குப் பிறகும் போராட்டம் தொடர்கிறது. போராட்டக்காரர்களை கடந்த வியாழக்கிழமை ராணுவம் சுற்றிவளைத்தது. அதிலிருந்து இன்று வரை 25 பேர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் தங்கியிருக்கும் பகுதியை சுற்றியுள்ள உயர்ந்த கட்டிடங்களில் ராணுவத்தின் குறிபார்த்து சுடும் வீரர்கள் துப்பாக்கிகளுடன் கண்காணித்து வருகின்றனர். கல்வீசித் தாக்குபவர்களை இவர்கள் ஸ்னிப்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வருகின்றனர். இதனால் போராட்டம் தீவிரமாகியுள்ளது. போராட்டக்காரர்களின் தலைவராக கருதப்படும் முன்னாள் ராணுவ ஜெனரல் சே டேங், வெளிநாட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கும்போதே, ராணுவத்தின் தோட்டா அவரின் தலையை பதம் பார்த்தது. கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர். பிழைப்பது கஷ்டம்தான் என்கிறார்கள் டாக்டர்கள். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. டயர்களைப் போட்டு கொளுத்தி வருகின்றனர் போராட்டக்காரர்கள். பிரச்னையை தீர்க்க தாய்லாந்து மன்னர் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். அவர் தலையிட்டால் அரசுடன் பேச்சு நடத்தத் தயார் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால், போராட்டத்தை ஒடுக்குவதில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. போராட்டக்காரர்கள் தங்கியுள்ள பகுதியில் குடிநீர், மின்சாரத்தை துண்டித்து விட்டது அரசு. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டு, ஊரடங்கு பிறப்பிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய தீவிரவாத போராட்டத்தை ஒடுக்க முடியும். தீவிரவாத அமைப்பையே வேரறுக்க முடியும். ஆனால் அமைதியாக நடக்கும் மக்கள் போராட்டத்தை எந்த அரசும் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. இதை தாய்லாந்து அரசும் உணரும்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger