Monday, May 24, 2010

டாஸ்மாக் வருமானம் ரூ.12,492 கோடி

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அரசுக்கு கடந்த நிதியாண்டில் ரூ.12,492 கோடி வருவாய் கிடைத்துள்ளது. முந்தைய நிதியாண்டை விட ரூ.2,500 கோடி அதிகம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு நவம்பரில், மதுபான சில்லரை விற்பனை கடைகளை அரசு நிறுவனமான டாஸ்மாக் நிறுவனமே ஏற்று நடத்த முடிவு செய்தது. அதன்படி டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 6699 மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதில் பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் அருகில் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் மாநிலம் முழுவதும் 178 கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவியாளர்கள் என 35 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ரூ.1000 கோடி முதல் ரூ.1500 கோடி வரை ஏலம் மூலம் தனியாருக்கு டெண்டர் விட்ட போது கிடைத்த வருமானத்தை விட நேரடியாக அரசே டாஸ்மாக் கடைகளை நடத்தியதால் பலமடங்கு கூடுதலாக வருமானம் கிடைத்தது.
உதாரணமாக 2003&04ம் ஆண்டில் தனியார் மூலம் மதுக்கடைகள் நடத்தப்பட்ட போது கலால்வரி மூலம் ரூ 1,657.10 கோடி, விற்பனை வரி மூலம் ரூ1,982.83 கோடி என மொத்தம் ரூ.3639.93 கோடி வருவாய் கிடைத்தது.
ஆனால் டாஸ்மாக் மூலம் மதுக்கடைகளை அரசே நடத்த துவங்கிய பிறகு 2004ம் ஆண்டில் கலால் வரியாக ரூ.2549.00 கோடி மற்றும் விற்பனை வரியாக ரூ.2323.03 கோடி என மொத்தம் ரூ.4872.03 கோடி வருவாய் கிடைத்தது.
இது முந்தைய ஆண்டைவிட ரூ.1232 கோடியே 10 லட்சம் கூடுதல் வருவாயாகும். இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் வருவாய் அதிகரித்து வந்தது. கடந்த 7 ஆண்டுகளில் அரசுக்கு 4 மடங்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
அதாவது 2004&05ம் ஆண்டு ரூ.4872 கோடி லாபம் கிடைத்த நிலையில் தற்போது அது ரூ.12,491.53 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் பார் ஏலம், கடைகளில் உள்ள காலி பாட்டில்கள், அட்டை பெட்டிகள் ஏலம் விடப்பட்டதன் மூலம் ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. கிட்டத்தட்ட கடந்த 15 ஆண்டுகளில் மதுபானங்கள் 10 மடங்கு விற்பனை உயர்ந்துள்ளது.
கடந்த 2008&09ம் ஆண்டு டாஸ்மாக் கடைகள் மூலம் கலால், விற்பனை வரியாக அரசுக்கு ரூ.10,601.50 கோடி கிடைத்த நிலையில் 2009&10ம் ஆண்டு ரூ.12,401.53 கோடி கிடைத்துள்ளது. மொத்தம் ரூ.1889.97 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிட்டியுள்ளது.
மேலும் காலி பாட்டில்கள், அட்டைப் பெட்டிகள், பார் டெண்டர் உள்ளிட்ட இனங்கள் மூலம் ரூ.500 கோடிக்கு மேல் கிடைத்துள்ளதால் தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை இந்த ஆண்டு வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comments:

Anonymous said...

kudi kudiyai kedukkum, tasmac ilavasa tv kodukkum

Related Posts with Thumbnails
 

Blogger