Wednesday, May 19, 2010

நிலவில் தண்ணீர்

நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்த நாடு இந்தியா. அதை மறைத்து, தான் கண்டுபிடித்ததாக அமெரிக்கா சொல்கிறது. அறிவியல் உலகில் இந்த மோசடி அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை. பலம் படைத்தவன் சொல்வதே உண்மை என்ற எழுதப்படாத விதி இருக்கும்வரை இது தொடரும்.
அமெரிக்கா 41 ஆண்டுகளுக்கு முன்பே நிலவுக்கு மனிதனை அனுப்பிய வல்லரசு. அதற்கு பல காலம் முன்பே அன்றைய சோவியத் யூனியனுடன் விண்வெளி ஆராய்ச்சியில் அது போட்டியில் குதித்தது. இரு வல்லரசுகளும் வரலாறு காணாத அளவில் பணத்தை கொட்டி ஆராய்ச்சிகள் நடத்தின. அப்போது நாம் அமெரிக்கா அன்பளிப்பாக அனுப்பிய பவுடரை பாலாக்கி குழந்தைகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தோம். அப்படி இருந்த இந்தியா திடீரென்று விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் பதித்தால் அமெரிக்கா சகித்துக் கொண்டிருக்க முடியுமா?
நிலவில் நீர் வளம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி விண்வெளி ஆராய்ச்சியாளர்களை மட்டுமல்ல, ராணுவம் தொடங்கி ரியல் எஸ்டேட் வரையிலான பல துறையினரையும் உறுத்திக் கொண்டிருந்தது. சிறிய ரோபோ அனுப்பி அந்த கேள்விக்கு விடை தேடலாம் என்ற சிக்கனமான கனவு கண்டவர் அப்துல் கலாம். அவர் யோசனைப்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் & இஸ்ரோ & உருவாக்கிய கருவி ‘மூன் இம்பாக்ட் ப்ரோப்’ என்பது. 2008 நவம்பர் 14ல் சந்திராயன் விண்கலத்தில் இஸ்ரோ அனுப்பிய அந்த கருவி நிலவில் நீர் இருப்பதற்கான அடையாளங்களை கண்டுபிடித்தது.
ஆனால், நிலவில் இறங்கிய 25 நிமிடங்களில் செயலிழந்தது. குறைந்த நேரமே தகவல்கள் கிடைத்ததால், முழுமையாக ஆராயாமல் நீர் கண்டுபிடிப்பு குறித்து நமது விஞ்ஞானிகள் விவரங்களை வெளியிடவில்லை. அந்த ஆய்வு 10 மாதம் நீண்டது. அதில் அமெரிக்கா முந்திக் கொண்டது. அதே சந்திராயனில் அவர்கள் அனுப்பிய கருவி பதிவு செய்த அடையாளங்களின் அடிப்படையில், தாங்கள் தண்ணீரை கண்டுபிடித்ததாக அறிவித்தனர். இந்தியா பற்றி பேச்சே இல்லை. ஓராண்டுக்கு பிறகு இப்போது நமது சாதனையை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் முதல் முறையாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
பொறாமை தனி மனிதர்களின் உரிமை அல்ல போலும்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger