செல்போன் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தொடக்கத்தில் வசதியானவர்கள், தொழிலதிபர்கள் செல்போன் பயன்படுத்தினர். தற்போது இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர். கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்கள், வகுப்பறைகளில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. சில தனியார் நிறுவனங்கள் கூட, அலுவலகத்தில் செல்போன் பேச தடை விதித்துள்ளன.
இவற்றை மீறி, பல்கலைக்கழக, கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துகின்றனர். வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்கு தெரியாமல் எஸ்.எம்.எஸ் அனுப்புகின்றனர். கார், பைக், பஸ்களில் போகும்போது, சாலைகளில் நடந்து செல்லும் போது, வீட்டில் இருக்கும்போது இரவு, பகல் பாராமல் மணிக்கணக்கில் செல்போனில் பேசுகின்றனர். நண்பர்கள் அருகே இருந்தால் கூட எஸ்.எம்.எஸ். மூலம் சாட்டிங் செய்யும் அளவுக்கு, செல்போனுக்கு இன்றைய இளைஞர்கள் அடிமையாகி விட்டனர்.
சாலையில் நடக்கும்போது, வாகனத்தை ஓட்டும்போது செல்போனில் பேசினால் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. மேலும், அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர்.
ரேடியோ பிரீக்வன்சி (வானொலி அலைவரிசை) மூலம் செல்போன் செயல்படுகிறது. நமது உள் காது மற்றும் மூளை பகுதியும் அதே போன்ற அலைவரிசையில்தான் செயல்படுகின்றன. செல்போனை காதின் அருகில் வைத்து பேசுவதால், உள் காதின் செவித்திறன் கடுமையாக பாதிக்கிறது. இதுபோல் தொடர்ந்து பேசுபவர்களுக்கு முதலில் காதில் வலி ஏற்படும். இரைச்சல் உருவாகும், அதன்பின் காது கேட்கும் திறன் படிப்படியாக குறையும். இறுதியாக காது கேட்கும் திறன் முழுமையாக நின்றுவிடும்.
செல்போனில் தொடர்ந்து பேசுவதால், வெளி காது, நடு காது, உள் காது மற்றும் மூளையில் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன. மனநிலையும் பாதிக்கலாம். சில நேரங்களில் மயக்கம், தலை சுற்றல் போன்றவைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த ஆராய்ச்சி தற்போது நடந்து வருகிறது. ஆனால் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் செல்போன் பேசுவதால் ஏற்படும் இந்த பாதிப்புகளை இதுவரை மறுக்கவில்லை.
செல்போன் பேசுவதால் பாதிக்கப்பட்டு காது வலி, காது சரியாக கேட்கவில்லை என்று தினமும் சராசரியாக 10 பேர் ஆஸ்பிட்டல் செல்கின்றனர். இதில் இளைஞர்கள்தான் அதிகம். அவசர தேவைகளுக்கு மட்டும் செல்போனை பயன்படுத்தலாம். முடிந்த அளவு ஹெட்போன், புளுடூத் பயன்படுத்தி பேசலாம்.
0 comments:
Post a Comment