வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் எந்தளவுக்கு பிரச்னைகள் சந்திக்கிறார்களோ, அந்தளவுக்கு இல்லாவிட்டாலும், வீட்டு உரிமையாளர்களுக்கும் பிரச்னைகள் உண்டு. “வீட்டையும், குடும்பத்தையும் நம்பி ஒப்படைக்கிறோம்; அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக அவர்கள் நடக்காமல் போகும்போது தான் பிரச்னையே வருகிறது” என்கின்றனர் பிளாட் ஓனர்ஸ்.
“நகை, பணத்துக்காக நடக்கும் ஆதாயக் கொலைகளுக்கு அதிகம் காரணமாக இருப்பவர்கள் வேலைக்கார பெண்கள். இவர்கள் கொடுக்கும் துப்பும், தகவலும் தான் குற்றங்களுக்கு துணை போகிறது. நிறைய வழக்குகளில் இது நிரூபணமாகி இருக்கிறது” என்பது போலீசாரின் குற்றச்சாட்டு.
குழந்தையை கடத்தி பணம் கேட்டு மிரட்டல், வெளியூர் சென்ற தொழிலதிபர் வீட்டில் கொள்ளை, நகை வியாபாரியிடம் வழிப்பறி போன்ற செய்திகளுக்கு எல்லாம் மூலக்காரணமாக இருப்பவர்களில் முக்கியமானவர் கள் வீட்டு வேலை செய்பவர்கள். அதனால் தான் வேலைக்காரர்கள் பற்றிய தகவல்களை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து கூறி வருகின்றனர். எவரும் அதை காதில் வாங்கியதாக தெரியவில்லை. “ஆள் கிடைப்பதே அரிது. அப்படியிருக்கும்போது அவர்களை பற்றி விசாரிக்க எங்களுக்கு ஏது நேரம்? தெரிந்தவர்கள் மூலமாகதான் வேலைக்கு வருகிறார்கள் என்பதால் நம்பிக்கையோடு வீட்டில் சேர்க்கிறோம். பிரச்னை என்று வருகிறபோது போலீசுக்கு கூட சொல்லாமல் வெளியேற்றி விடுகிறோம். அவர்களால் பக்கத்து வீடுகளுக்கு வரும் பிரச்னைகளை கூட நாங்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் பிளாட் ஓனர்ஸ் அசோசியேஷன் நிர்வாகி வேல்ராஜ்.
இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது? வீட்டுக்காரர்களால் வேலை பார்க்கும் பெண்களுக்கும் பிரச்னை. வேலைக்காரர்களால் வீட்டுக்காரர்களுக்கும் பிரச்னை. இரு தரப்புக்கும் பாதிப்பு வராமல் வீட்டு வேலைத் தொழிலை முறைப்படுத்துவது எப்படி?
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் பற்றிய முழு விவரங்களும் போலீசுக்கு தெரியும். போலீஸ் அனுமதியுடன் தான் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அந்த பெண்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? பின்னணி என்ன? எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் முறை அங்கிருக்கிறது. இங்கு இல்லை. இதுதான் பிரச்னை.
“வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு உரிமைகள் தரவும், உரிய பாதுகாப்பு கிடைக்கவும் நலவாரியம், குறைந்தபட்ச கூலி நிர்ணயம் என நிறைய விஷயங்கள் வந்து விட்டன. ஆனால், அவர்களுக்கு என மத்திய சட்டம் எதுவும் இல்லை. இந்த அம்சங்களை எல்லாம் உள்ளடக்கிய சட்டம் வந்தால் தான் வேலைக்கு ஆட்களை அமர்த்தும் வீடுகளில் பிரச்னைகள் தீரும்” என்கிறார் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் கீதா.
வீட்டில் வேலை செய்ய ஒருவரை சேர்த்துக் கொள்வதற்கு முன்பு அவர் முகவரி என்ன? அங்கு நிலையாக தங்கியிருப்பவரா? அவருக்கு தெரிந்தவர்கள் யார்? இதற்கு முன்பு யார் வீட்டில் வேலை செய்தார்? அங்கிருந்து விலக காரணம் என்ன? என்பது போன்ற விவரங்களை தெரிந்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் வீட்டு வேலை செய்பவரின் போட்டோ, முகவரி ஆகியவற்றை அருகில் உள்ள காவல்நிலையத்தில் கொடுத்தால், பிரச்னை வரும்போது உதவும். ஏஜன்சி மூலமாக ஆட்களை தேர்வு செய்தாலும் போட்டோ, முகவரி உள்ளிட்ட விவரங்களை கேட்டுப் பெற வேண்டும். அவசரத்திற்கு ஆள் கிடைத்தால் போதும் என்று சேர்ப்பது நல்லதல்ல. அதேநேரத்தில் குற்றவாளிகள் தானாக பிறப்பதில்லை. சூழ்நிலைகள் அவர்களை குற்றவாளிகளாக மாற்றுகின்றன. எனவே எத்தனை நம்பிக்கையான, நல்ல வேலைக்காரர்களாக இருந்தாலும் விலையுயர்ந்த பொருட்களை அவர்கள் கண் பார்வையில் அலட்சியமாக போட்டு வைப்பது ஆபத்து.
வீட்டு வேலை செய்பவர்கள் மூலம் வீட்டு விவகாரங்கள் வெளியில் போகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தவறானவர்களுக்கு அது தகவலாகி விடும். எனவே வீட்டு விஷயங்களை வீட்டு வேலை செய்பவர்கள் முன்பு பேசாமல் இருப்பது நல்லது. சின்னச்சின்ன சண்டை உள்ளிட்ட கருத்து மோதல்களை கூட அவர்கள் போகும் வரை காத்திருந்து தொடர்வதுதான் சரி.
வேலைக்காரர்கள் தானே என்று கண்டபடி ஏசுவது, மரியாதை இல்லாமல் அழைப்பது போன்றவை அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். நேரிடையாக மோத முடியாது என்பதால் ஏதாவது மறைமுக நடவடிக்கையில் ஈடுபடலாம். அது பெரிய இழப்பாக முடியலாம். சக மனிதர் என்று அன்பாக நடத்துவது முக்கியம். முதலில் நிறைய உரிமை கொடுத்துவிட்டு, பிறகு அதை தடுப்பதும் பிரச்னை ஏற்படுத்தலாம். அதிகம் இடம் கொடுக்கவும் கூடாது, அலட்சியப்படுத்தவும் கூடாது. அளவோடு இருந்தால் பிரச்னை இல்லை என்கிறது போலீஸ்.
வீட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் வேலையை பல தனியார் நிறுவனங்கள் செய்கின்றன. சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களை அணுகினால் நாம் சொல்லும் வேலைக்கு ஏற்ப ஆட்களை அனுப்புவார்கள். அதற்கான ஊதியத்தை நிறுவனத்திடம் தான் செலுத்த வேண்டும். வீட்டு வேலை செய்பவருக்கு நிறுவனமே சம்பளம் தரும். ஆனால், வீட்டுக்காரர்களிடம் வாங்கியதில் பாதிக்கூட இருக்காது. இடைத்தரகர்கள் போல் செயல்படும் இந்த ஏஜன்சிகள் பாதி சம்பளத்தை தங்கள் பாக்கெட்டில் போட்டுக் கொள்கின்றனர். இதனை யாரும் எதிர்த்துக் கேட்க முடியாது. தட்டி கேட்பவர்களை தட்டி வைக்க ரவுடிகளையும் கூடவே வைத்திருக்கின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனம் அப்படி ஏமாற்றிய பணம் ஒரு கோடியை தாண்டுமாம்.
இன்னும் சில ஏஜென்சிகள், வெளியூரில் இருந்து சிறுவர், சிறுமிகளை, பெண்களை கடத்தி வந்து வீட்டு வேலைக்கு அனுப்புகின்றனர். அவர்கள் மிரட்டும் மிட்டலில் வீட்டு வேலை செய்பவர்கள் வாயைத் திறக்க முடியாது. இப்படி கடத்தப்படுபவர்கள் பெரும்பாலும் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம் போன்ற வறட்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவை தவிர ஆந்திராவை சேர்ந்த சிறுவர், சிறுமிகளும் இந்தப் பட்டியலில் உள்ளனர். இதன் பின்னணியில் பெரிய கும்பலே செயல்படுகிறது. பிச்சை எடுக்க கடத்தப்படும் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகளில் கொஞ்சம் கூட குறைவில்லாமல் இவர்களும் அனுபவிக்கிறார்கள். ‘பிளேஸ்மென்ட் ஏஜென்சி’ என்ற பெயரில் திருவான்மியூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை என சென்னையில் பல இடங்களிலும், முக்கிய நகரங்களிலும் ஏராளம் உள்ளன. ஆள், அரசியல் செல்வாக்கு உள்ள தனிநபர்கள் சிலரும் இந்த அநியாய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டுக்காரர்கள் விரும்பிக் கேட்கும் எல்லா வயதுள்ள வேலைக்காரர்களும் இவர்களிடம் உண்டு. அனுப்புபவர்களை வீட்டுக்காரர்களிடம் நெருங்கி பழகச் சொல்லி கட்டாயப்படுத்துவார்கள். சபல கேஸ்கள் சிக்கிக் கொண்டால் கதை கந்தல்தான்.
வீட்டுவேலை செய்யும் பெண்களுக்கு என குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிராவில் தனிச் சட்டமே உருவாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஒரு மணி நேரத்திற்கு 27 ரூபாய். ஒரு நாளைக்கு ரூ.180. கர்நாடகாவில் ஒரு நாளைக்கு ரூ.120. ஆந்திராவில் ரூ.150 என கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 200 ரூபாய் 40 காசு என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தினசரி சம்பளம் ரூ.200 தருவதற்கு கூட ஆட்சேபம் இல்லை. ஆனால், ஒரு மணிக்கு ரூ.30 என்பதும், குறைந்தது 4 மணி நேரம் வேலை பார்த்தால் ரூ.120 தர வேண்டும் என்பதையும் ஆட்சேபிக்கிறது பிளாட் ஓனர்ஸ் சங்கம். ஒரு பெண்ணால் இரண்டு மூன்று வீடுகளில் வேலை பார்க்க முடியும். அதனால் இந்த சம்பளம் கொஞ்சம் அதிகம் என்பதும் அவர்கள் கூறும் வாதம்.
மற்ற மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்ட கூலி குறைவானது. பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது. திருத்தியமைக்க வேண்டும் என்று அந்த மாநிலங்களில் போராட்டம் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.30 என்பது நியாயமானது. குறைக்கக் கூடாது என்கிறார் தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிளாரா.
மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் பற்றியும் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்கிறார்.
வேலை செய்யும் பெண்கள் மற்றும் ஊழியர்கள் தவறு செய்யாத அளவுக்கு விழிப்புடன் இருப்பது வீட்டுக்காரர்களுடைய கடமை என்கிறது பிளாட் ஓனர்ஸ் அசோஷியேசன்.
வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்தும் போது கவனிக்க வேண்டிய டிப்ஸ்...
சில வீடுகளில் வீட்டு வேலை செய்பவர்களை முழு நேரமும் தங்க வைப்பார்கள். வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும், பிள்ளைகள் தங்கள் வயதான பெற்றோர்களை கண்காணித்துக் கொள்ளவும் இப்படி ஆட்களை வைத்துக் கொள்கிறார்கள். அந்த நேரத்தில் சம்பந்தப்பட்டர்களை எப்படி கையாளுவது என்ற பயற்சியும், விவரமும் வீட்டு வேலை செய்பவர்களுக்கு அவசியம். மேலும் டாக்டர்களிடம் ஆலோசனை பெறும்போது அவர்களையும் அழைத்துச் செல்வது நல்லது.
வீட்டு எஜமானர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. அவர்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் எப்படி நடத்துகிறார்கள் என்பதை அறிய வேண்டும்.
வீட்டு பொருட்களை பத்திரப்படுத்துவது அவசியம். அவசியமான பொருட்களை மட்டும் கையாள விட்டால் போதுமானது.
வீட்டு வேலை செய்பவர்களை வீட்டில் இருப்பவர்களிடம் இருந்து மட்டுமல்ல; பக்கத்து வீட்டு வில்லன்களிடம் இருந்து காப்பாற்றுவதும் அவசியம். அது அவர்களுக்கு மட்டுமல்ல; வீட்டுக்காரர்களுக்கும் நல்லது. வேலை பார்க்கும் பெண்களிடம் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர் பற்றிய விவரங்களை சொல்லி வைக்க வேண்டும். இந்த எச்சரிக்கை உணர்வு அடுக்குமாடி குடியிருப்பில் கட்டாயம். அவசர உதவி எண்களை வீட்டில் எழுதி வைத்திருப்பதும், அதை பயன்படுத்த சொல்லித் தருவதும் முக்கியமானது.
0 comments:
Post a Comment