Tuesday, May 18, 2010

அக்னி

ஒரிசாவில் இருந்து 2,000 கி.மீ. தூரம் சென்று இலக்கைத் தாக்கும் அக்னி 2 ஏவுகணை நேற்று காலை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

உள்நாட்டு தொழில் நுட்பத்தில் அக்னி ரக ஏவுகணைகளை இந்திய விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர். ஏற்கனவே, 700 கி.மீ. தூரம் சென்று இலக்கைத் தாக்கும் அக்னி 1 ரக ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 2,000 கி.மீ. தூரம் சென்று இலக்கை துல்லியமாகத் தாக்கும் அக்னி 2 ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டி.ஆர்.டி.ஓ.), ஐதராபாத்தில் உள்ள பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
முற்றிலும் இந்தியாவின் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அக்னி 2 ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை வெற்றிகரமாக ஏவப்பட்டது.
நவீன ரேடார்கள் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிக் சாதனங்கள் மூலம் இதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.
20 மீட்டர் நீளமுள்ள அக்னி 2 ஏவுகணை சரியான பாதையில் சென்று வங்காள விரிகுடா கடல் பகுதியில் உள்ள இலக்கைத் தாக்கியது.
அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாகவும் கடந்த ஆண்டு மே 19 மற்றும் நவம்பர் 23ம் தேதிகளில் இரண்டு முறை ஏவப்பட்டபோது இருந்த சில குறைபாடுகள் இப்போது சரி செய்யப்பட்டு இருப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
17 டன் எடையுள்ள அக்னி 2 ஏவுகணை, 1000 கிலோ எடையுள்ள அணுகுண்டை 2 ஆயிரம் கி.மீ. தூரம் எடுத்துச் சென்று தாக்கும் திறன் படைத்தது. இது இந்தியாவின் ஏவுகணை சாதனையில் மற்றொரு மைல்கல்லாக கருதப்படுகிறது.
அக்னி 2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக 3,500 கி.மீ தூரம் சென்று தாக்கக்கூடிய அக்னி 3 ஏவுகணை சில மாதங்களில் சோதனை செய்யப்படுகிறது. இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger