அஜ்மல் கசாபுக்கு மரண தண்டனை. ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி தீர்ப்பு வழங்கி விட்டார். ஐந்து மரண தண்டனைகளும், ஐந்து ஆயுள் தண்டனைகளும் ஏழாண்டு கடுங்காவல் தண்டனை ஒன்றும் கசாபுக்கு கிடைத்திருக்கிறது. ஒரு முறைதான் மரணம் வரும். வெவ்வேறு குற்றங்களுக்கான சட்டப்படியான தண்டனைகள் அவை.
நேராக தூக்கு மேடைக்கு போகப்போவதில்லை அவன். மரண தண்டனை சரிதானா என்பதை ஐகோர்ட் ஆராய்ந்து உறுதி செய்ய வேண்டும். ஆறு மாதம் ஆகலாம். பிறகு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் போடலாம். கடைசியாக ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுக்க வாய்ப்பு உண்டு. ஏற்கனவே பெண்டிங்கில் உள்ள 25 மனுக்களுடன் இதுவும் சேராது என்று சொல்லிவிட முடியாது.
யாரையும் நொந்து பலனில்லை. நமது நீதிமுறை அப்படி. பல நாடுகளில் இதெல்லாம் கிடையாது. அது பெருமையா சாபமா புரியவில்லை. அரசு வக்கீல் சொன்னதுபோல கசாப் ஒரு சாத்தான். குடிக்க தண்ணீர் கொடுத்தவரை துப்பாக்கி குண்டுகளால் துளைத்தெடுத்த நாய் என்றார் அவர். கசாப் என்ன செய்தான் என்பதை உலகமே டீவியில் பார்த்தது. இருந்தாலும் ஜனநாயக கட்டமைப்பு வழியாக நீதி ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது. 2001ல் பார்லிமென்டை தாக்கிய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சலை இன்னும் தூக்கில் போடாததால் மும்பைவாசிகளுக்கு இதில் சந்தேகம் இருக்கிறது.
கசாபை தூக்கில் போட்டால் தீவிரவாதிகள் திருந்திவிடுவார்களா? என்று சிலர் கேட்கிறார்கள். மடையர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். என்றாலும், கசாப் வெறும் கருவி. அவனை இயக்கியது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள். அவற்றுக்கு தீனி போட்டு வளர்ப்பது உளவுத்துறையும், ராணுவ தளபதிகளும். அந்த சதிகாரர்களை கூண்டில் ஏற்ற நமக்கு வக்கில்லை என்பது எதார்த்தம்.
இங்கிருப்பவர் உதவியின்றி வெளியாள் ஊடுருவ முடியாது. துரோகிகளை கண்காணித்தால் எதிரிகளை தடுக்க முடியும். அதற்கான டெக்னாலஜி இருக்கிறது. அரசிடம் பணம் இருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்ட மனம் வேண்டும். குடிமக்களின் உயிரை பாதுகாப்பது பிரதான கடமை. அதற்கு ஏற்பாடு செய்யும்வரை அடுத்த குண்டு எங்கே வெடிக்குமோ என்ற அச்சத்துடனே இந்தியர்கள் வாழவேண்டும்
Friday, May 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment