வேலை நாளில் தம்பதிகள் அலுவலக வேலை, வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஒன்றாக அமரும் நேரம் இரவு 8.44 மணி என்று இங்கிலாந்து ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இந்த நேரம் பொதுவாக பொருந்தும் என்றாலும், சிறிது மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனின் லான்கேஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்ததாவது: திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நாட்களில் குடும்பத்தில் தம்பதியர் அனைத்து வேலைகளையும் முடித்து, மனஅழுத்தம் குறைந்து ஒன்றாக அமரும் சரியான நேரம் குறித்து 3,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. வேலையில் இருந்து வீடு திரும்பியதும், வீட்டு வேலைகளை முடித்து கணவன் & மனைவி ஒன்றாக அமரும் நேரம் இரவு 8.05 என்று தெரிய வந்தது.
எனினும், அலுவலக வேலையில் ஏற்பட்ட மனஅழுத்தம், அன்றாட வேலைகளில் ஏற்பட்ட அனுபவங்கள் என அனைத்தையும் மறந்து இருவரும் ரிலாக்சாக அமரும் துல்லியமான நேரம் இரவு 8.44 மணி. இது வேலைகளை முடித்து அவர்கள் விடுதலை பெறும் 8.05ஐ விட 39 நிமிடங்கள் அதிகம்.
அதாவது, வேலைகள் முடிந்தாலும், அன்றைய தினத்தில் ஏற்பட்ட மனஅழுத்தங்களில் இருந்து முற்றிலும் விடுதலை பெற்று ஒருவரையொருவர் முழு அன்புடன் அருகில் பார்த்துக் கொள்ளும் நிமிடமாக 8.44 உள்ளது. பணிச் சுமை, வீட்டுப் பொறுப்புகள் காரணமாக நகரங்களில் தம்பதிகள் ஒன்றாக செலவிடும் நேரம், ஒரு நாளில் 75 நிமிடங்களுக்கும் குறைவே.
நவீன வாழ்க்கை முறையால் நகரங்களில் பணிச்சுமை மற்றும் வீட்டுப் பொறுப்புகள் கூடுவதால் விவாகரத்து பெறும் தம்பதிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மனவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு நாளில் வேலை நேர முடிவு என்பது ஆண், பெண் இடையே வேறுபடுகிறது. அலுவலகம் முடிந்து வந்த பிறகு உணவு தயாரிப்பு உட்பட வீட்டு வேலைகளில் 10ல் 6 பெண்கள் ஈடுபடுகின்றனர். அதுவே 3ல் ஒரு ஆண் மட்டுமே வீட்டு வேலையில் ஈடுபடுவதாக ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment