வேலைப் பளுவால் ஏற்படும் மனஅழுத்தத்தால் பெண்களுக்கு மாரடைப்பு உட்பட இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக டென்மார்க் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அதில் நர்ஸ்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடிய நர்ஸ் வேலை உட்பட வேலைப் பளு அதிகமுள்ள பெண்களிடம் டென்மார்க் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். வேலைப் பளுவால் அவர்களுக்கு ஏற்படும் மனரீதியான, உடல்நிலை பாதிப்புகளை ஆராய்ந்தனர். 12,000 நர்ஸ்கள் உட்பட ஏராளமான பெண்களிடம் வேலைச் சுமை பற்றி கேள்விகள் கேட்டு தகவல்கள் திரட்டப்பட்டன.
தினசரி வேலை நேரம், செய்யும் வேலைகள், கூடுதல் சுமை, வேலைப் பளு ஏற்படும்போது மனநிலை குறித்து தகவல்கள் பெறப்பட்டன. 1993ல் தொடங்கிய இந்த ஆராய்ச்சியில் 45 முதல் 64 வயதுக்கு உட்பட்ட நர்ஸ்களின் 15 ஆண்டுகால பணிகள் பற்றி சமீபத்தில் ஆராயப்பட்டது.
அதிக வேலைச் சுமையை அனுபவித்ததாக கூறிய பெண்களில் 25 சதவீதத்தினருக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருந்தது ஆய்வில் தெரிய வந்தது. தங்கள் வேலைப் பளு சமாளிக்க கூடிய அளவில் இருந்ததாக கூறியவர்களுக்கு மனஅழுத்தம், இதய நோய் அறிகுறி இல்லை. வேலைப் பளு மிக மோசமாக இருந்ததாக கூறியவர்களில் 35 சதவீதத்தினருக்கு இதய நோய் ஏற்பட்டிருந்தது.
வேலைச் சுமையால் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் சிகரெட், மதுப் பழக்கம் உட்பட வாழ்க்கை முறை மாறிப் போனது தெரிய வந்தது. குறிப்பாக 51 வயதில் உள்ளவர்களுக்கு இதய நோய் பாதிப்பு அதிகமிருந்தது.
இதுகுறித்து டென்மார்க் பல்கலைக்கழக மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
வேலைப் பளுவால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து இதுவரை ஆண்களுக்கு மட்டுமே ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
முதல்முறையாக பெண்களின் வேலைப் பளு குறித்து ஆராய்ந்தோம். மனரீதியான கூடுதல் வேலைகள், அதனால் ஏற்படக்கூடிய பதட்டம், மனஅழுத்தம் ஆகியவை பெண்களை இதய நோயில் தள்ளும் அபாயம் கொண்டவை.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெண்களை அதிகளவில் கொல்லும் நோயாக இதய நோய்கள் உள்ளன. வேலையில் மனஅழுத்தத்தை தவிர்த்தால் ஏராளமானோர் அந்த ஆபத்தில் இருந்து தப்ப முடியும் என்றனர்.
0 comments:
Post a Comment