ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும் தேய்ந்தும் நமக்கு காட்சி கொடுப்பவர். ‘சர்வம் சந்திர கலாபிதம்’ என்று சந்திரனை ஜோதிட நூல்களில் குறிப்பிடுகின்றன.
லக்னத்துக்கு அடுத்தபடியாக முக்கியம் வாய்ந்தது ராசி. ஜோதிடம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எடுத்தவுடன் கேட்கும் கேள்வி ‘நீங்கள் என்ன நட்சத்திரம், என்ன ராசி?’ என்பது. எந்த நட்சத்திர தினத்தன்று நாம் பிறந்தோமோ, அது நமது ஜென்ம நட்சத்திரம். அந்த நட்சத்திரத்துக்கான ராசி ஜென்ம ராசி அல்லது ஜனன ராசி. இந்த ராசியின் அடிப்படையிலேயே யோகங்கள் உண்டாகின்றன. அதுபோல குருபலம், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டசனி ஆகிய கோசார பலன்கள் சந்திரனை பிரதானமாக வைத்து நடக்கின்றன. எல்லா திதிகளிலும் சந்திர, சூரியன் ஆளுமை இருக்கும். சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் காலம் அமாவாசை. சூரியனுக்கு 7&ம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது பவுர்ணமி. சந்திரனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: திங்கள்
தேதிகள்: 2, 11, 20, 29
நட்சத்திரம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம்
ராசி: ரிஷபத்தில் உச்சம், கடகத்தில் ஆட்சி.
நிறம்: பால் வெண்மை
ரத்தினம்: முத்து
தானியம்: நெல்
ஆடை: தூய வெள்ளி
அமாவாசை யோகம், பவுர்ணமி யோகம், கஜகேசரி யோகம், சகடை யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், சந்திராதி யோகம் என்று பலவகையான யோகங்களை தருபவர் சந்திரன். நமது ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும்.
சந்திரன் மாதுர்காரகன். அதாவது, தாயின் பலம், நிலைமை குறித்து அறியமுடியும். சந்திரன் மனோகாரகனும்கூட. அதாவது மனதை ஆள்பவன். அமைதி, திருப்தி, கருணை, நிம்மதி, இரக்கம், காதல், கனிவு, சிந்தனைத் திறன், கற்பனை வளம் ஆகியவற்றை நிர்ணயிப்பது சந்திரனே. சந்திரன் ஆதிக்கம் உள்ளவர்கள் கதை, கவிதை, இசை, டான்ஸ், அனிமேஷன், கிராபிக்ஸ், வெளிநாட்டு வியாபாரம், தண்ணீர் சம்பந்தமான தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, கடல் சார்ந்த தொழில், கப்பல் துறைகள், கடற்படை, மனோதத்துவம், மனநலம், மனவசியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
சந்திரனுக்கு உண்டான தேதிகள், நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இத்துறைகளில் ஜொலிப்பார்கள். சந்திரன் உச்சம் பெறும் ரிஷப ராசியிலும் ஆட்சிபெறும் கடக ராசியிலும் பிறப்பது மிகவும் சிறப்பு. லக்னத்தில் சந்திரன் இருப்பதும் லக்னத்தை சந்திரன் பார்ப்பதும் நல்ல யோகம்.
பிறந்த லக்னமும் சந்திரனால் கிடைக்கும் யோகமும்
எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் எந்த வகையான யோகங்களை கொடுப்பார்?
மேஷ லக்னம்/ராசி & நிலபுலன், கல்விச் செல்வம், வெளிநாடு செல்லும் யோகம்
ரிஷப லக்னம்/ராசி & எதிலும் முதன்மை ஸ்தானம்
மிதுன லக்னம்/ராசி & சொல்லாற்றல், கதை, கவிதை, இசை துறைகளில் ஏற்றம்
கடக லக்னம்/ராசி & கற்பனை சக்தி, புகழ், கீர்த்தி, பேச்சாற்றல்
துலா லக்னம்/ராசி & தொழில், வியாபாரத்தில் பெரிய யோகங்கள்
விருச்சிக லக்னம்/ராசி & சகல பாக்யங்களும் பெறும் யோகம்
மகர லக்னம்/ராசி & வெளிநாடு வாசம், தண்ணீர் தொடர்பான துறைகளில் ஏற்றம்
மீன லக்னம்/ராசி & பூர்வ புண்ணிய அமைப்புகளின்படி யோகம். குழந்தைகளால் செல்வாக்கு.
மற்ற லக்னம், ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் பலத்தை வைத்து யோகங்கள் கிடைக்கும். எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் சந்திரன் நீச்சம், 6, 8, 12 ஆகிய இடங்களில் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேராமல் இருக்க வேண்டும்.
வழிபாடு, பரிகாரம்
பவுர்ணமி விரதம் சிறப்பான பலன் தரும். சத்யநாராயண பூஜை செய்வது நன்மை பயக்கும். அம்மன் கோயில்களில் மாலை நேர வழிபாடு உத்தமம். பக்தர்களுக்கு, ஏழைகளுக்கு நெய்சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம், பழங்கள் கலந்த சாதம் ஆகியவை வழங்கலாம்.
‘ஓம் ஷிர்புத்ராய வித்மஹே
அம்ரித் தத்வாய தீமஹி
தந்நோ சந்த்ர பிரசோதயாத்’ என்ற சந்திர காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். ‘ஓம் உம் சிவய நம சந்திர தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
திருவோண நட்சத்திரத்தன்று பெருமாள் கோயிலில் தாயாருக்கும், பெருமாளுக்கும் மஞ்சள், குங்குமம் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் வழங்கலாம். பவுர்ணமி அன்று சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் வழிபாடுகள் செய்து சந்திர தரிசனம் செய்யலாம். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகில் உள்ள வரகுணமங்கை, கும்பகோணம் அருகே உள்ள திங்களூர் ஆகியவை சந்திர பரிகார ஸ்தலங்கள். சந்திரனுக்கு உண்டான முக்கிய திருத்தலம் திருப்பதி. இங்கு சந்திரனாகவே ஏழுமலையான் அருள்பாலிக்கிறார்.
- ஜோதிடர் மதி
0 comments:
Post a Comment