Wednesday, May 12, 2010

தீவிரவாதம்

தீவிரவாதியாக வாழ்வது போரடித்து விட்டது என்று பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்கிறார் ஒரு இளைஞர்.

நமது காஷ்மீரில் இருந்து நிறைய இளைஞர்கள் எல்லை தாண்டி போகிறார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமித்து நிர்வகிக்கும் ‘ஆசாத் காஷ்மீர்’ பகுதியில் ஏராளமான முகாம்கள் இருக்கின்றன. அவற்றில் இந்த இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்யப்படுகிறது. இந்தியாவை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி, நமது நாடு இஸ்லாம் மார்க்கத்தின் எதிரி என்று பதிய வைப்பார்கள். மத பெரியவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பழமைவாதிகள் அந்த பணியை வெற்றிகரமாக முடித்ததும், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் உளவு அமைப்பின் அதிகாரிகள் வேவு பார்க்கவும், ஆயுதங்களை கையாளவும் தீவிர பயிற்சி கொடுப்பார்கள்.
நமது விரல்களாலேயே நம் கண்களை குத்த வேண்டும் என்பதில் பாகிஸ்தான் காட்டும் முனைப்பு அசாத்தியமானது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தில் தனக்கு பங்கில்லை என்று ஒதுங்கிக் கொள்ள இது வசதியான ஏற்பாடு. முற்றிலும் காஷ்மீரின் விடுதலைக்காக அங்குள்ள மக்கள் நடத்தும் போராட்டம் என்று உலகை நம்ப வைக்கவும் பயன்படுகிறது. முகமது அஷ்ரப் அப்படி எல்லை தாண்டி சென்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர். 1999ம் ஆண்டு அப்படி சென்று பயிற்சி முடித்து லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் உறுப்பினர் ஆனார்.
எத்தனை உயிர்களை பலி கொண்டாரோ தெரியவில்லை; மனித உயிர் குடிக்கும் தீவிரவாத வெறி அர்த்தமற்றது என்பதை சில ஆண்டுகளில் உணர்ந்து கொண்டார். தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடுவது என்று தீர்மானித்தார். அஸ்மா என்ற பெண்ணை திருமணம் செய்தார். அங்கேயே செட்டிலாக நினைத்தவருக்கு இந்தியாவில் கழித்த இளமைக்காலம் மனதில் வலம் வந்தது. மனைவியை அழைத்துக் கொண்டு நேற்று எல்லை வரை வந்துவிட்டார். இந்திய ராணுவ வீரர்கள் பிடித்து விசாரித்த போது கதையை சொன்னார். எத்தனையோ காரணங்களை கேட்டு பழக்கப்பட்ட ராணுவத்துக்கு, ‘தீவிரவாத வாழ்க்கை அலுத்துவிட்டது’ என்பது புதிதாக இருந்தது. நடுத்தர வர்க்கத்தினர் உச்சரிக்கும் வாசகமாயிற்றே.
தீவிரவாதம் ஒரு சுழல். அதில் விழுந்தவர்கள் கரை சேர்வதில்லை. அஷ்ரப் அர்த்தமுள்ள வழி காட்டியிருக்கிறார்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger