‘கிரீன் எக்ஸர்சைஸ்’ எனப்படும் பசுமையான பகுதியில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், உடல் நலம், மன நலம் மேம்பட்டு ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க ரசாயன சங்கத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பத்திரிகையில் வெளியான ஆய்வு கட்டுரை வருமாறு:
வயது, பாலினம், மனநலம் ஆகிய வித்தியாசமின்றி 1,252 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை இயற்கையான சூழ்நிலையில் பல்வேறு உடல் பயிற்சிகள், பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தினர்.
நடைப் பயிற்சி, தோட்ட வேலை, சைக்கிளிங், மீன்பிடித்தல், படகு சவாரி, குதிரை சவாரி ஆகியவற்றுடன் விவசாய வேலையிலும் 1,252 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்பிறகு அத்தனை பேரும் பரிசோதிக்கப்பட்டனர்.
அதில் இளைஞர்கள், மனநலம் பாதித்தவர்களில் பெரும்பாலோருக்கு அதிக நன்மை கிடைத்தது தெரிய வந்தது. மற்றவர்களின் ஆரோக்கியமும் மேம்பட்டிருந்தது.
விளைநிலம், பூங்கா உட்பட இயற்கைச் சூழலில் உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவோருக்கு உடல் மட்டுமின்றி மனநலமும் சிறப்பாக இருக்கும் என்று ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
நகரங்களில் உள்ள பூங்காக்களும் இதில் அடக்கம். தோட்டங்கள், பூங்காக்களில் நீர் தெளித்தோ, நீர்த் தொட்டிகள், குளங்கள் இருந்தால் ஆரோக்கியம் மேலும் அதிகரிக்கும் என்கிறது ஆய்வு.
இதுபற்றி இயற்கை நிபுணர் ஜூல்ஸ் பிரெட்டி கூறியதாவது:
வீட்டுத் தோட்டத்திலோ, பூங்காவிலோ 5 நிமிட உடற்பயிற்சி செய்வது அபார பலன் தரும். உடல் நலம், மனநிலையை சிறப்பாக்குவதுடன் தன்னம்பிக்கையும் உயரும். மனஅழுத்தம், விரக்தி ஆகியவை சிறிது நேரம் மறைந்தாலே, நீண்ட கால ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும் என்றார்.
0 comments:
Post a Comment