மெக்சிகோ வளைகுடாவில் கரையில் இருந்து 48 மைல் தூரத்தில் கடலுக்குள் இருக்கும் எண்ணெய் கிணறு வெடித்து சிதறிய விபத்தால் கடல் பகுதியில் எண்ணெய் படலம் படுவேகமாக பரவி வருகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் அடியோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், வாகனங்களின் இயக்கத்துக்காக இரவும் பகலும் கச்சா எண்ணெய் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தரையில் மட்டுமல்லாது கடல் பகுதியிலும் எண்ணெய் கிணறுகளை அமைத்துள்ளனர். அப்படி அமைக்கப்பட்ட பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிணறு, கடந்த மாதம் 22ம்தேதி வெடித்து சிதறி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் 11 பேர் பலியாயினர். அன்று முதல் இன்று வரை அந்த கிணற்றில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் கடலில் பரவி வருகிறது. செயற்கைக்கோள் மூலம் எடுத்த படத்தில் 130 மைல் நீளம், 70 மைல் அகலத்துக்கு எண்ணெய் படலம் மிதப்பது தெரிய வந்துள்ளது. இந்த எண்ணெய் கிணறு தினமும் 5 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெயை கடலில் கொட்டி வருகிறது. எண்ணெய் படலத்தை மேலும் பரவாமல் தடுக்க 2.17 லட்சம் அடி நீளத்துக்கு கடலின் மேற்பரப்பில் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எண்ணெய் கிணறு விபத்து நடந்தவுடனேயே, கடல் பகுதியில் திட்டமிட்டுள்ள அனைத்து எண்ணெய் கிணறு திட்டங்களையும் உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்புக்கான புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட உள்ளன. இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்கும் எண்ணெய் கிணறுகள் மட்டுமே இனி இயங்க முடியும். அதோடு, பரவி வரும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணிக்கான செலவு முழுவதையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமே ஏற்க வேண்டும் என்றும் ஒபாமா கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் இதுபோல் விபத்து நடந்து, எண்ணெய் படலம் பரவும்போது, அரசு செலவிலேயே அதை அகற்றும் பணி நடந்து வந்துள்ளது. இப்போதுதான் கம்பெனியே செலவை ஏற்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் என எதிர்பார்க்கலாம்.
0 comments:
Post a Comment