யுனைடெட் கிங்டம் ஆஃப் கிரேட் பிரிட்டன் என்றால் விளம்பர வாசகம் போல ஒலிக்கும். சுருக்கமாக சொன்னால் பிரிட்டன். இங்கிலாந்து, வட அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்த தேசம் அது.
நம்மை 200 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி ஆட்சி நடத்தியதற்கு வெள்ளையர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? ‘இந்தியர்களுக்கு ஆளத் தெரியாது, நிர்வாகம் தெரியாது’. அவர்கள் வகுத்துத்தந்த நாடாளுமன்ற, நீதிமன்ற, அரசு நிர்வாக நடைமுறைகளையே இன்றும் பின்பற்றுகிறோம். தனக்கென ஒரு அரசியல் சாசனம் எழுதி வைக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு நேரவில்லை. ‘எங்கள் மரபுகளே மாபெரும் சாசனம்’ என்றார்கள். உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக திகழ்ந்த மமதை. இந்தியாவில் நிறைய கட்சிகள் இருப்பதையும், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இங்கே கூட்டணி ஆட்சி அமைவதையும் பிரிட்டிஷ் அரசியல்வாதிகளும் மீடியாவும் கிண்டல் செய்வதுண்டு. வியாழக்கிழமை நடந்த தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தொங்குகிறது. கன்சர்வேடிவ், லேபர் என இரண்டு பெரிய கட்சிகள் இதுவரை மாறி மாறி ஆட்சி செய்தன. இப்போது லேபர் அரசு. கார்டன் பிரவுன் பிரதமர். சுமார் 100 இடங்களை இழந்துள்ளது அந்த கட்சி. மொத்த தொகுதிகள் 650. மெஜாரிட்டிக்கு 326 தேவை. லேபர் ஜெயித்திருப்பது 261தான். கன்சர்வேடிவ் கட்சி 306 இடங்களை பிடித்திருக்கிறது.மூன்றாவது கட்சியான லிபரல் டெமக்ராடிக் கட்சி 57 இடங்களை கைப்பற்றி கிங் மேக்கராக எழுந்து நிற்கிறது. அதன் தலைவர் நிக் கிளக். அவரது ஆதரவு கிடைத்தால் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் டேவிட் கேமரூன் பிரதமர் ஆகலாம்.
ஆனால், லிபரல் கட்சியின் கொள்கைகள் லேபர் கட்சியோடுதான் ஒத்துப்போகும். ஐரோப்பிய யூனியனையே இன்னமும் ஜீரணிக்க முடியாத கன்சர்வேடிவ் கட்சியுடன் லிபரல்களால் கைகோர்க்க முடியாது.
குழப்பமான இந்த நிலையில் குதிரை பேரமும், ரகசிய ஒப்பந்தங்களும் லண்டன் வதந்தி மார்க்கெட்டை கலக்குகின்றன. 27 இடங்களை கையில் வைத்திருக்கும் உதிரி கட்சிகள் இந்திய அரசியல்வாதிகளிடம் ஆலோசனை கேட்க துடிக்கின்றன.
சக்கரம் முழுச்சுற்று வந்துவிட்டது.
0 comments:
Post a Comment