தினசரி உணவில் காய்கறி, பழங்களை குழந்தைகள் சேர்த்துக் கொள்ளத் தவறினால், பின்னாளில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக உலக கேன்சர் ஆராய்ச்சி அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் கேன்சர் ஏற்படுவதைத் தடுக்கும் வழிகளில் காய்கறி, பழங்களின் பங்கு பற்றி நிபுணர் குழு ஆராய்ச்சி நடத்தியது. அதன் பரிந்துரை வருமாறு:
புற்றுநோயை உருவாக்கும் செல்கள் வளர்ச்சியைத் தடுப்பதில் காய்கறி, பழங்கள் அதிக பங்கு வகிக்கின்றன. தினசரி உணவில் பரிந்துரைக்கப்படும் அளவுக்கு காய்கறி, பழங்களை குழந்தைகள் கட்டாயம் சாப்பிடச் செய்ய வேண்டும். ஆனால், 5ல் ஒரு குழந்தை மட்டுமே காய்கறி, பழங்களை சரியான அளவு சாப்பிடுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதனால், மீதமுள்ள 4 பேரில் பலருக்கு பின்னாளில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
அதேபோல, புற்றுநோயைத் தவிர்க்க, உடல் எடையை சரியாக பராமரிப்பது அவசியம். அதற்கும் காய்கறி, பழங்கள் மிகவும் உதவும்.
குழந்தைகளுக்கும் எடை பராமரிப்பு கட்டாயம். அதிக எடையுள்ள குழந்தைகள் பெரியவரானதும் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும்.
தினசரி குறைந்தது 30 நிமிடம் கடுமையாக உடல் உழைப்பது, சர்க்கரை நிறைந்த பானங்களை தவிர்ப்பது, அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவது ஆகியவையும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி உணவியல் நிபுணர் நதாலி வின் கூறுகையில், “சிறிய வயதிலேயே குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை கடைபிடிக்க பெற்றோர் ஊக்கம் அளிக்க வேண்டும். பல்வேறு புற்றுநோய்களைத் தடுப்பதில் செடிகளில் இருந்து கிடைக்கும் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறி, பழங்கள் சிறப்பாக செயல்படுவது தெரிய வந்துள்ளது” என்றார்.
0 comments:
Post a Comment