நிலத்தின் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது. அதோடு சேர்ந்து, நிலம் தொடர்பான தகராறு, கொலை, மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. போலி பத்திரம், ஆள் மாறாட்ட மோசடிகளை தடுக்க தமிழகத்தில் மின்னணு கருவி மூலம் பத்திரப் பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 574 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில் 250 சார்பதிவாளர் அலுவலகங்களில் மின்னணு கருவி மூலம் பத்திரப் பதிவு முறை அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி பத்திரம் மூலம் மோசடி நடப்பது உடனடியாக பாதியாகக் குறையும். நிலத்தின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியதில் இருந்தே, இது தொடர்பான குற்றங்களின் எண்ணிக்கையும் உயரத் தொடங்கியது. உரிமையாளருக்குத் தெரியாமல் போலி பத்திரம் தயாரித்து ஆள் மாறாட்டம் மூலம் விற்பனை செய்வது, உரிமையாளர்கள் இருக்கும்போதே, அவர்கள் வீட்டில் 30, 40 பேராக நுழைந்து அதிரடியாக உரிமையாளர்களை வெளியேற்றுவது, மிரட்டி, குறைந்த விலைக்கு பேசி முடிப்பது என பல மோசடிகள் நடக்கின்றன. வெப் கேமரா மூலம் படம் எடுப்பது, கை ரேகைகளை பதிவு செய்வது போன்ற கட்டுப்பாடுகள் அமலாவதால், மோசடிகள் பெரிதும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் வெப் கேமரா மூலம் எடுக்கப்பட்டு கம்ப்யூட்டரில் சேகரிக்கப்படும். அடுத்து இரு தரப்பின் கை ரேகைகளும் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும். ஒரு முறை இதுபோல் சேமித்துவைத்து விட்டால், அடுத்து அதே நிலம் கைமாறும்போது, கம்ப்யூட்டர் ஆவணங்களுடன் ஒப்பிடப்பட்டு, சரி பார்க்கப்படும் என்பதால் மோசடி நடக்காது. மேலும் கை ரேகையும் புகைப்படமும் மின்னணு முறையில் சேகரிக்கப்படுவதால், அவை தெளிவாக இருக்கும். மீண்டும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தவறுகள் இல்லாமல் தெளிவான முடிவு எடுக்க வசதியாக இருக்கும்.
நவீன தொழில்நுட்பத்தை வில்லங்கம் நிறைந்த பத்திரப் பதிவு போன்ற துறைகளில் பயன்படுத்த தொடங்கும்போது, ஊழல், மோசடிகளுக்கு இடமிருக்காது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மோசடி ஆசாமிகளிடம் அப்பாவி பொதுமக்கள் இழப்பது தடுக்கப்படும். அதே போல், காலியாகக் கிடக்கும் நிலங்களில் திடீரென குடிசை போட்டு, தன்னோட இடம்தான் இது என போலி பத்திரத்தைக் காட்டி அப்பாவிகளிடம் ஏரியா ரவுடிகள் அடாவடி செய்வதும் அடங்கும்.
Saturday, July 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment