Monday, July 19, 2010

இந்திய தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

 இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக இந்தியா, சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வருவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. உள்நாட்டில் உள்ளவர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது எனக் காரணம் கூறியுள்ளன.
இந்த ஆண்டுக்கு ஆசிய, ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த 24 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி என இங்கிலாந¢தும் 20 ஆயிரம் பேருக்கு மட்டும்தான் அனுமதி என கனடாவும் அறிவித்துள்ளன. ஆங்கிலம், பிரெஞ்ச் தெரிந்திருக்க வேண்டும் என்கிறது ஆஸ்திரேலியா. டாக்டர், கட்டடக் கலைஞர்கள் வரலாம் என்கிறது கனடா. ஆங்கிலத் தேர்வில் பாஸ் செய்திருக்க வேண்டும் என்கிறது இங்கிலாந்து. இப்படி பல வகையிலும் பல கட்டுப்பாடுகள்.
இங்கிலாந்தில் இந்தியர்களுக்கும் வங்கதேசத்தவர்களுக்கும் சொந்தமாக உள்ள ஓட்டல்களின் எண்ணிக்கை மட்டுமே 25 ஆயிரத்தை தாண்டும். இங்கு சமையல் செய்ய, பரிமாற உள்ளூர்க்காரர்களா வருவார்கள்? அவர்கள் சமைத்தால் சாப்பிடுவது யார்? உலகம் முழுவதும் 189 நாடுகளில் 2.5 கோடி இந்தியர்கள் தொழிலாளர்களாக, தொழில் நடத்துபவர்களாக இருக்கிறார்கள். உலக பொருளாதாரமே கஷ்டத்தை சந்தித்தபோதும், இவர்கள் இந்தியாவுக்கு அனுப்பிய சம்பளப்பணம் 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
வயதானவர்களை தாதி போல் பார்த்துக் கொள்வது, டாய்லெட் சுத்தம் செய்வது, டிரைவர், பிளம்பர், கட்டுமானத் தொழிலாளர் என உள்நாட்டில் இருப்பவர்கள் செய்யத் தயங்கும் வேலைகளைத்தான் வெளிநாட்டினர் செய்கின்றனர். இதனால் வேலை பறிபோகிறது என்ற வாதம் பொய்யாகிறது. உண்மையான காரணம் அரசியல். கட்சிகளும் தொழிலாளர் யூனியன்களும் எழுப்பும் கோஷங்களுக்கு பயந்து அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. எந்த நாட்டில் இருந்தும் எத்தனை கோடிகளில் வேண்டுமானாலும் முதலீடு வரலாம். தொழிலாளர்கள் வரக் கூடாது என்பது என்ன நியாயம்?
இந்தியாவிலும் 2 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டினர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது பலருக்குத் தெரியாத உண்மை.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger