அப்பாவிமக்களின் உயிர் தீவிரவாதிகளுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் எதிர்க்கும் அரசுகளை ஒன்றும் செய்யமுடியாது என்பதால், எளிய இலக்குகளான மக்களை குறிவைக்கின்றனர். உலகம் முழுவதும் இதே கதைதான். சமீபத்தில் உகாண்டாவில் நடந்திருக்கிறது. கொல்லப்பட்டவர்கள் எந்த அரசியலையுமே அறியாத கால்பந்து ரசிகர்கள். உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள எத்தியோப்பிய நாட்டவருக்கு சொந்தமான உணவு விடுதி, ரக்பி விளையாட்டு திடல் ஆகிய இரு இடங்களில் உலக கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை காண பிரமாண்டமான டி.வி.க்கள் வைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வெளிநாட்டு பயணிகள் உள்பட பலர் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆட்டத்தை ரசித்தபடி இருந்தனர். 10.30 மணியளவில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் சிக்கி 64 பேர் இறந்தனர். 65 பேர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அமெரிக்கர் என்பது மட்டும் தெரியவந்திருக்கிறது.
உலகின் படுபயங்கர தீவிரவாத இயக்கமான பின்லேடனின் அல்கய்தா ஆதரவுடன் சோமாலியாவில் செயல்படும் ஷெபப் பயங்கரவாதிகள் இக் கொடூரத்தை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உள்நாட்டு போரில் நிலைகுலைந்து கிடக்கும் சோமாலியாவில் அமைதி நடவடிக்கைகளில் ஆப்ரிக்க யூனியனை சேர்ந்த படைவீரர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். உகாண்டா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கியதுதான் இந்த யூனியன். சோமாலிய தலைநகர் மொகாதிசு நகரில் சமீபத்தில் பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டனர். இதற்கு அமைதிப்படையினர்தான் காரணம் என்று ஷெபப் தீவிரவாதிகள் குற்றம்சாட்டினர். அமைதிப்படைக்கு எதிராக போராட சோமாலிய மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். படைவீரர்களை வாபஸ் பெறும்படி உகாண்டாவுக்கு இவர்கள் ஏற்கனவே மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்த பின்னணியில் பார்க்கும்போது உகாண்டாவில் குண்டுவெடிப்பு நாசவேலையை செய்தது ஷெபப் கும்பலாகத்தான் இருக்கும் என்பது உறுதியாகிறது.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் சற்று பொருளாதார செழிப்புள்ளது உகாண்டா. பொருளாதார ரீதியாக ஒரு நாடு வளர்ச்சி பெற்று வருவது தீவிரவாதிகளின் கொள்ளிக் கண்ணுக்கு ஆகாதது. குண்டுவெடிப்பு, நாசவேலைகள் மூலம் அதை நிர்மூலமாக்குவார்கள். அதன் ஒரு பகுதியாகவும் இந்த கொடூர செயல் செய்யப்பட்டிருக்கலாம். அரசியல் காரணங்களுக்காக ஒன்றும் அறியாத அப்பாவி கால்பந்து ரசிகர்கள் கொல்லப்பட்டதற்கு உலகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. சர்வதேச அளவில் பின்னிப்பிணைந்துள்ள இத்தகைய தீவிரவாத இயக்கங்களை ஒடுக்க, வேற்றுமைகள் எல்லாவற்றையும் மறந்து உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.
0 comments:
Post a Comment