Friday, July 16, 2010

ஆடி மாதத்தின் அற்புதங்கள்

 பன்னெடுங்காலமாக நம் முன்னோர்கள் கடைபிடித்து வரும் சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு நிச்சயமாக ஏதாவது காரணமும், அறிவியல் முக்கியத்துவமும் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்புக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால பருவ சூழ்நிலைகளுக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரதங்களையும், வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
நாளை ஆடி மாதம் பிறக்கிறது. மற்ற மாதங்களைவிட ஆடிக்கு அதிக சிறப்புகள் உண்டு. இந்த மாதத்தில் வரும் அமாவாசை, பூரம், கிருத்திகை, ஆடிப்பெருக்கு என பல வைபவங்களும் சிறப்பானதாகும். அதிலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். .
ஆடி மாதம்தான் தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்குகிறது. சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வருவதையே தட்சிணாயன புண்ணிய காலம் என்கிறோம். இந்த மாதத்தில் பகல் பொழுது குறைவாகவும் இரவு நேரம் அதிகமாகவும் இருக்கும். காற்றின் வேகம் அசுரத்தனமாக இருக்கும். அதனால்தான் ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்ற வழக்கு மொழி ஏற்பட்டது. ஆடி பிறந்தாலே வீடுகளிலும் கோயில்களிலும் ஆன்மீக விழாக்கள் களைகட்டிவிடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் கோலாகல விழா, சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.
இந்த மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி, அதாவது, விரதம் இருந்து செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு சகல பாக்யங்களும் கிடைக்கும். கல்யாண வைபோகம் கூடிவரும். புத்திர பேறு உண்டாகும் என்பது தலைமுறை தலைமுறையாக உள்ள நம்பிக்கை.
பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்த உகந்த காலமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. வீட்டை சுத்தம் செய்து, வாயிற்படிகளுக்கு மஞ்சள் பூசி, தோரணம் மற்றும் வேப்பிலை கட்டி தர்ம புண்ணிய காரியங்களில் ஈடுபடுவர். அலகு குத்தி பால்குடம் எடுத்தல், தீ மிதித்தல், தீச்சட்டி ஏந்தி வலம் வருதல், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ் ஊற்றுதல், பொங்கலிடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலங்களுக்கு சென்று வருதல் என்று மாதம் முழுவதும் பக்தி காரியங்களில் ஆர்வம் காட்டுவார்கள்.
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை முக்கியமானது. அன்று நதிகள் மற்றும் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் அன்னதானம் செய்வதும் புண்ணிய பலன்களை சேர்க்கும். அதேபோல இந்த மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு மற்றொரு சிறப்புமிக்க விழாவாகும். நீர்நிலைகள், நதிகள் கடல் போன்ற இயற்கை செல்வங்களுக்கு நன்றி செலுத்தும் நாளாகும். ஆடி 18&ம் நாள் நதிக்கரைகளிலும், கடற்கரைகளிலும் குடும்பம் குடும்பமாக கூடி உணவு உண்பதும், ஆடிப்பாடி கொண்டாடுவதும் மரபாகும். புதுமணத் தம்பதிகள் நிலாச்சோறு உண்டு, தாலி மாற்றி புதுக்கயிறு அணிவார்கள். கன்னிப் பெண்கள் திருமணம் நடக்க வேண்டி, நூல் போன்ற மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்து கொள்வார்கள்.
அம்பாள் காமாட்சி, சிவனை நோக்கி கடுந்தவம் இருந்து ஈசனை அடைந்த மாதம் இது. திருநெல்வேலி அருகில் உள்ள சங்கரன்கோவிலில் நடக்கும் ஆடித் தபசு விழா பிரசித்தி பெற்றது. கோமதி அம்மன் தவத்துக்கு இரங்கி புன்னை வனத்தில் சங்கர நாராயணராக ஆடி பவுர்ணமியன்று காட்சியளித்தார் சிவபெருமான். இதேபோல் ஆடிப்பூரமும் சிறப்புமிக்க நாளாகும். கோதை ஆண்டாள் பூமி பிராட்டியாக அவதாரம் செய்த தினமே திருவாடிப்பூரம் ஆகும். அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலிலும், நாடெங்கிலும் உள்ள பெருமாள் ஆலயங்களிலும் பிரமோற்சவம் போல விழா நடக்கும்

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger