Wednesday, July 28, 2010

குழந்தைகளை ரொம்ப பொத்தி வளர்க்காதீங்க

 சிறு வலி, வேதனைகூட தெரியாத அளவுக்கு குழந்தைகளை பொத்தி வளர்க்காதீர்கள் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
குழந்தைகளிடம் தைரியத்தை வளர்ப்பது பற்றி இங்கிலாந்தில் உள்ள விபத்து தடுப்பு ராயல் சொசைட்டி நிறுவனம் சமீபத்தில் ஆய்வு நடத்தியுள்ளது. குழந்தை வளர்ப்பு பற்றி அவர்கள் கூறியிருக்கும் ஆலோசனைகள்:
குழந்தைகளுக்கு பெரும்பாலும் கடினமான வேலைகளை பெற்றோர் தருவதில்லை. அவர்களால் செய்ய முடியாது என்று இவர்களே நினைக்கின்றனர். இன்னொரு காரணம், அந்த வேலைகளை செய்யும்போது குழந்தைகள் அடிபட்டு, இடித்துக் கொண்டுவிடக் கூடாதே என்ற அதிக அக்கறை. சம்மர் லீவில்கூட இசை, நடனம், எளிய விளையாட்டுகள் என்று உடலை வருத்தாத பயிற்சிகளிலேயே சேர்க்கின்றனர். வீட்டுக்குள் பொம்மையை வைத்துக்கொண்டோ, கம்ப்யூட்டரிலோ விளையாடுவது மிகவும் பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள். உலகம் முழுவதும் பெற்றோரிடம் இந்த மனநிலை இருக்கிறது.
குழந்தைகள் கஷ்டப்படுவார்கள், தெரியாத வேலையில் ஈடுபட்டு அடிபட்டுக் கொள்வார்கள் என்று பெற்றோர் கருதக்கூடாது. ஆபத்து ஏற்படாத வகையில் அந்த செயலை எப்படி செய்ய வேண்டும் என்று பெற்றோர் அருகில் இருந்து சொல்லித்தர வேண்டும்.
அப்போதுதான், எந்த செயலையும் நம்மாலும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை குழந்தைகளிடம் அதிகரிக்கும். செயல்களை கவனமாக, பாதுகாப்பாக, ஆபத்து ஏற்படாத வகையில் செய்ய வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு ஏற்படும். வாழ்வில் சிக்கலான சூழ்நிலைகளை சிறப்பாக சமாளிக்கும் திறமையை இது வளர்க்கும்.
இவ்வாறு ராயல் சொசைட்டி விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து கல்வி முறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வருவது குறித்தும் நிபுணர்கள் ஆலோசித்து வருகின்றனர். கட்டையில் ஆணி அடிப்பது, சிறிய மரம் ஏறுவது, மரத்தில் கயிறு கட்டி டயரில் தொங்குவது போன்ற பயிற்சிகளை நர்சரி பள்ளிகளிலேயே கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger