போலிமார்க்சீட் ஊழலில் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. யாரைத்தான் நம்புவது என்று தெரியவில்லை. சென்னையில் நடைபெறும் இன்ஜினியரிங் கவுன்சலிங்கின்போதுதான் பல மாணவ, மாணவிகள் போலி பிளஸ்2 மார்க் பட்டியல் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில் போலி மார்க்சீட் தயாரித்து கொடுத்ததாக திருவேங்கடம் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ஓய்வுபெற்ற உதவி தலைமை ஆசிரியர். இதுதொடர்பாக கல்லூரி கல்வித்துறை ஊழியர் ஒருவரும் கைதாகியிருக்கிறார்.
இந்த கும்பல் கடந்த 8 ஆண்டுகளாக இந்த போலி வேலையில் ஈடுபட்டு வந்திருக்கிறது. ‘அதிக மார்க் வேண்டுமா’ என்று டிபிஐ வளாகத்தில் கூவிக்கூவி அழைத்து வியாபாரம் நடத்தியிருக்கிறார்கள். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களிடம்தான் அதிகளவில் போலி மார்க் ஷீட் கொடுத்துள்ளனர். பிள்ளையை டாக்டராக்கி விட வேண்டும், இன்ஜினியராக்கி விட வேண்டும் என்ற வெறியில் இருக்கும் பெற்றோர் இவர்களிடம் போலியாக மார்க் பெற்று இப்போது மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர். இவர்களது பேராசைக்கு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. டாக்டரும் இன்ஜினியரும் ஆக்க இவர்கள் துடிப்பது பணத்தை அறுவடை செய்யலாம் என்ற நோக்கத்தில்தான். அதற்காக இத்தகைய பெற்றோர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதைத்தான் இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டியுள்ளது.
இதே பணம் குவிக்கும் ஆசைதான், புனிதமான ஆசிரியர் தொழிலில் உள்ளவர்களையும் இதுபோன்ற கீழ்த்தரமான வேலையில் இறங்க வைத்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய் ஊழலில் சாம்ராஜ்யம் படைத்து கோடிகோடியாக குவித்தார். உத்தமர் காந்தி விருது பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச வழக்கில் சிக்கியிருக்கிறார். திறமையை கணக்கீடாகக் கொண்டுதான் துறையின் உயர் பதவி ஒருவருக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த பதவியை பயன்படுத்திக்கொண்டே திருட்டுத்தனமாக ஊழலிலும் லஞ்சத்திலும் திளைப்பது பொறுத்துக்கொள்ள முடியாதது. எல்லோர் மீதும் தொடர் கண்காணிப்பு இருந்தால்தான் இதை கட்டுப்படுத்த முடியும் போலிருக்கிறது.
போலி மார்க்ஷீட் ஊழலில் கல்வித்துறையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பிடிபட்ட திருவேங்கடம் கூறியிருக்கிறார். இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட்டுவைக்க மாட்டோம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. விசாரணையை இன்னும் துரிதப்படுத்தி கல்வித்துறையில் கலந்துள்ள போலிகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
0 comments:
Post a Comment