Tuesday, July 27, 2010

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர்

 பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. விலைவாசி உயர்வு, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு உள்பட பல பிரச்னைகளை எழுப்ப பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் திட்டமிட்டிருக்கின்றன. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவையும் விலைவாசி உயர்வை எதிர்த்து கடுமையாக குரல் கொடுக்க முடிவெடுத்துள்ளன.
நாட்டின் அதிமுக்கிய பிரச்னையை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வந்து, அதற்கு நல்ல தீர்வு காண வேண்டியது முக்கியம். எதிர்க்கட்சிகளின் கடமை அது. ஆனால் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஒரு பிரச்னை கிடைத்தது என்ற ஒரே கோணத்தில் இதை எதிர்க்கட்சிகள் அணுகுவது தவறு. விலைவாசி உயர்வு பிரச்னை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வலியுறுத்தி, பார்லிமென்டை முடக்க பா.ஜ. திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.
கடந்தகாலங்களிலும் பார்லிமென்ட்டை முழுமையாக செயல்பட முடியாமல் அமளி செய்து எதிர்க்கட்சிகள் முடக்கியிருக்கின்றன. அமளி செய்த கட்சிக்கு ஒரு மலிவான விளம்பரம் கிடைக்கும். அதை தவிர இதனால் எந்த பயனும் இல்லை. விலைவாசி உயர்வு பிரச்னையை சரியான விவாதத்துக்கு கொண்டு செல்லாமல், சபை நடவடிக்கையை முடக்க நினைப்பதால் என்ன சாதித்து விட முடியும். இப் பிரச்னையை தீர்ப்பதில் அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதைத்தான் அது காட்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் விவாதம் நடத்த வாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெளிவுபட தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் விரும்பும் எந்த விஷயத்திலும் விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
எனவே பார்லிமென்ட் சுமுகமாக நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்து, முக்கிய பிரச்னைகளுக்கு ஆரோக்கியமான விவாதத்தின் வழியாக தீர்வு காண வேண்டும்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger