Thursday, July 29, 2010

புற்றுநோய்க்கு மருந்தாகிறது ஆக்டோபஸ் நஞ்சு

 ஜோசியத்தால் பிரபலமடைந்த ஆக்டோபஸ் இப்போது மருத்துவத் துறையை கலக்கத் தொடங்கியிருக்கிறது. புற்றுநோய், உடல்வலி, ஒவ்வாமை போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க ஆக்டோபசின் நஞ்சை மருந்தாக பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மெல்பர்ன் பல்கலைக்கழகம், நார்வே அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம், மற்றும் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து மருத்துவர் பிரையன் பிரை தலைமையில் கடல் வாழ் உயிரினமான ஆக்டோபஸ், கட்டில் பிஷ் எனப்படும் சிப்பி மீன் மற்றும் இதர ஆழ்கடல் மீன்கள் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியின் போது ஆக்டோபசில் மேலும் 4 புதிய இனங்களைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் இதில் கண்டறியப்படாத மேலும் பல இனங்கள் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அன்டார்ட்டிகா கடல் பகுதியில் வாழும் ஆக்டோபசின் நஞ்சு மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் என்பதையும் இக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக விலங்குகளின் நஞ்சு மனித இனத்துக்கு மருந்தாக பயன்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் மருத்துவம் சார்ந்த கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வு மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு நடத்தப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்டோபசின் நஞ்சில் மிகக் குறைந்த அளவில் சத்து மிக்க புரதச் சத்து இருப்பதும், அது மனிதனுக்கு மிகப் பயனுள்ள ஒன்றாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அன்டார்டிக் கடல் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சுமார் 203 ஆக்டோபஸ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger