Thursday, July 29, 2010

பாகிஸ்தானின் இரட்டை வேட கபட நாடகம்

 
 
 விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்திய விவகாரத்தின் பரபரப்பு பல திசைகளில் நீடிக்கிறது. ஆப்கனில் தலிபான்களை ஒழிக்கும் முயற்சியில் அமெரிக்க ராணுவம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. ஆனால் அவர்களை ஒடுக்குவது சவாலாகவே இருந்து வருகிறது. தலிபான்களை ஒடுக்க, பாகிஸ்தான் துணையை அமெரிக்கா நாடியது. இதற்காக பாகிஸ்தானுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை அமெரிக்கா அளித்து வருகிறது. ஆனால் இந்த உதவியையும் பெற்றுக்கொண்டு, தலிபான் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பாகிஸ்தான் அளித்து வருகிறது. இதைத்தான் இணையதளம் அம்பலப்படுத்தியது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு தலிபான் தீவிரவாதிகளுடன் உள்ள உறவை 90 ஆயிரம் ஆவணங்களுடன் இந்த இணையதளம் ஆணித்தரமாக நிறுவியுள்ளது. பாகிஸ்தானின் இரட்டை வேட கபட நாடகம் இதனால் உலக அரங்கில் வெட்டவெளிச்சமானது.
இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடுதான் ஆச்சர்யமளிக்கிறது. இரட்டை வேடம் போடும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனங்களை அமெரிக்கா தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த விஷயம் எல்லாம் அவ்வளவு முக்கியமானதல்ல என்பதைப் போல அமெரிக்கா பேசுகிறது. இணையதளம் அம்பலப்படுத்தியதன் தர்மசங்கடம் மட்டுமே அதற்கு இருக்கிறது. விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்திய புலனாய்வு ரகசிய தகவல்களில் புதிய விஷயங்கள் ஏதும் இல்லை. அதில் உள்ள பல அம்சங்கள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுவிட்டன என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார். போர்க்களத்தில் திரட்டப்பட்ட ரகசிய புலனாய்வு தகவல்கள் அம்பலமானது குறித்து தனது கவலையையும் அவர் தெரிவித்திருக்கிறார். போர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு இந்த தகவல்கள் மனச்சோர்வை ஏற்படுத்தி விடும் என்ற கவலைதான் அது.
தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடங்கி 9 ஆண்டுகள் ஆகிறது. அதிநவீன வசதிகளுடன் உள்ள அமெரிக்க படையால், மலைப்பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாத குழுவை ஏன் ஒடுக்க முடியவில்லை என்பதை யோசிக்க வேண்டும். பாகிஸ்தான் உளவு அமைப்பு தலிபான்களுக்கு கொடுக்கும் சகலவிதமான உதவிகள்தான் இதற்கு காரணம். இது மிக வலுவான வகையில் நிரூபிக்கப்பட்ட பிறகும், பாகிஸ்தானுக்கு இணக்கமான போக்கை அமெரிக்கா கையாண்டு வருவது சரியல்ல. ராஜதந்திரம் என்றெல்லாம் சொல்லி, பாகிஸ்தானை கண்டிக்காமல் இருப்பது சரியல்ல. தீவிரவாதத்தை வேரோடு களைய வேண்டும் என்று அமெரிக்கா எடுக்கும் முயற்சி இதனால் பாதிக்கப்படவே செய்யும்

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger