Friday, July 16, 2010

திருமணம் ஆனவர்களில் 20 சதவீதம் பேர்..........

 திருமணம் ஆனவர்களில் 20 சதவீதம் பேர் வேறொரு நபரை காதலிக்கிறார்களாம். இதில் ஆண், பெண் வித்தியாசம் அதிகமில்லை என்கிறது ஒரு ஆய்வு. 29 சதவீத ஆண்களும் 19 சதவீத பெண்களும் இந்த காதலுக்காக தங்கள் வாழ்க்கைத் துணையை விட்டு பிரிந்து செல்ல தயாராக இருக்கின்றனர் என்று அதிர வைக்கிறது மேற்படி ஆய்வு.
குடும்ப கட்டமைப்பும், உறவுகளும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. கலாசாரத்துக்கு தகுந்தபடி வேறுபடுகின்றன. மேலைநாடுகளில் கணவன் , மனைவி பந்தம் என்பது பாசக்கயிறு போல் வலுவானதில்லை. எதையும்விட தனிநபர் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவர்களின் பாரம்பரியம். எனவே ஒருவரின் உரிமையில் மற்றவர் தலையிடுவது கிடையாது. பரஸ்பர வேற்றுமைகளை பெரிதுபடுத்தாமல் வாழ்க்கையை ஓட்டுவதும், வேறுபாடுகள் முற்றும்போது பேசி பிரிந்து அவரவர் பாதையில் தனியாக பயணம் தொடர்வதும் அங்கே நடைமுறை. அத்தகைய சூழல் இருந்தும் மண முறிவு சதவீதம் குபீரென அதிகரித்துள்ளது. சமூக, மன இயல் நிபுணர்களை கவலைப்பட வைத்திருக்கிறது இந்த போக்கு.
நமக்கும் இது அந்நியமான விஷயமல்ல. புராண இதிகாசங்களில் தொடங்கி இன்றைய சீரியல்கள் வரை சின்னவீடும், கள்ளக்காதலும் தொடர்ந்துவரும் நிதர்சனம். அதன் விளைவுகள் தினசரி செய்தியாக பத்திரிகைகளை நிரப்புகிறது. உளவியல் நிபுணர்கள் இதற்கு சுலபமான விளக்கம் தருகின்றனர். கிடைத்ததைவிட கிடைக்காததை  தன்னிடம் உள்ளதைவிட அடுத்தவரிடம் உள்ளதை  இருப்பதைவிட பறப்பதை விரும்புவதுதான் மனித புத்தியின் இயல்பு என்கிறார்கள். அது மரத்துக்கு மரம் தாவுவதில் முரண்பாடு கிடையாது. உறவுக்கு வெளியே துணை தேடுவதற்கு காதல் மீது பழி போடுவது அபத்தம் என அவர்கள் வர்ணிப்பது சுவாரசியம்.
கண்டதும் வருவது காதல் அல்ல; காமம். மூளையில் ஏற்படும் ரசாயன அதிர்வு. சதா சர்வ காலமும் அவளை/அவனை நினைத்து உருகுவதும், சேர்ந்திருக்க எதையும் இழக்க தயாராவதும் அந்த சுரப்பியின் வேலையன்றி வேறில்லை என்கிறார் லிண்டா பிளேர் என்ற நிபுணர். உண்மையான காதல் என்பது பழகப் பழக வளரும் நட்பு போல மெல்லப் பூக்கும் உறவு. அதை புரிந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியை வெளியில் தேடி வாழ்க்கையை தொலைக்க மாட்டார்கள்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger