Tuesday, July 6, 2010

ஜார்ஜ் பெர்னாண்டஸ்

 இந்தியஅரசியலில் ஒரு சூறாவளியை போல நுழைந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். சோசலிச கொள்கைகளில் ஈர்ப்புக் கொண்டவர். தொழிற்சங்க தலைவராக இருந்து, தொழிலாளர்களின் அபிமானத்தை பெற்றவர். பம்பாய் டாக்சிமென் யூனியன் இவர் மீது கொண்ட அன்பால் பழைய பியட் கார் ஒன்றை பரிசாக கொடுத்தது. எளிமைக்கு இலக்கணம். நாடாளுமன்றத்துக்கு நடந்தே சென்றவர். விமானத்தில் எகானமி வகுப்புதான். ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர். ராணுவ அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தவர். ‘இந்தியாவின் எதிரி சீனா’ என வெளிப்படையாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இவரின் அரசியல் அஸ்தமன காலம் சவப்பெட்டி மூலமாக வந்தது. கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களை கொண்டுவர வாங்கப்பட்ட சவப்பெட்டியில் ஊழல் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அங்கிருந்து சரிவு தொடங்கியது. உடல்நிலையை காரணம் காட்டி கடந்த தேர்தலில் போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டது. கோபத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு தோற்றார். அதன்பின் அரசியல் அரங்கில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கினார்.
பெர்னாண்டஸின் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்றும் சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது. பிரிந்து வாழ்ந்துவந்த மனைவி லீலா கபீரின் பாதுகாப்பில் அவர் இருப்பதாக பின்னர் தெரியவந்தது. பெர்னாண்டசை அவரது சகோதரர்கள் சந்திக்க லீலா கபீர் அனுமதி மறுப்பதாக புகார் எழுந்தது. இதை எதிர்த்து, பெர்னாண்டசின் சகோதரர்கள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அல்சிமீர் என்ற மறதி நோயால் பெர்னாண்டஸ் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு லீலா கபீர் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. எனவே பெர்னாண்டசை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என்பது சகோதரர்களின் வாதம். இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு நேற்று பெர்னாண்டஸ் அழைத்து வரப்பட்டிருக்கிறார். அவருக்கோ எதுவுமே நினைவில் இல்லை. தனி அறையில் அவரிடம் பேசி பார்த்தார் நீதிபதி. பெர்னாண்டஸ் இருப்பது வேறு ஏதோ உலகத்தில். அவர் என்ன பேசினார் என்றே புரியவில்லை என நீதிபதி கூறியிருக்கிறார். எனினும் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் மனைவியின் பராமரிப்பிலேயே இருக்கலாம் என்றும் அவரை சகோதரர்கள் சந்திக்கலாம் என்றும் நீதிபதி அனுமதி வழங்கியிருக்கிறார்.
இந்த வழக்கே, பெர்னாண்டசின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை குறிவைத்து நடத்தப்படுவதுதான் என சொல்லப்படுகிறது. இதற்காக நினைவு தப்பிக் கிடக்கும் பெர்னாண்டசை பொம்மை போல நடத்துகிறார்கள். சாதாரணப்பட்டவர்களில் இருந்து உயர்மட்டத்தில் இருப்பவர்கள் வரை உறவுகள் பணத்தை மையமாக கொண்டே இருக்கிறது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் விவகாரம் இந்த கசப்பான நிஜத்தை மறுபடி எடுத்துக்காட்டியிருக்கிறது.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger