அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் இடைநிலை கல்வி என்று குழந்தைகள் அனைவரையும் கல்வி கற்க வைப்பதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. தற்போது செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி முறை நடைபெறும் வகுப்பறைகளின் சூழலை மாற்றும் வகையில், ‘கட்டிடத்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்’(பில்டிங் அஸ் லேர்னிங் எய்டு) என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அரசு பள்ளிகளின் சுவர்களும், மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பம்சம். இதன்மூலம், வகுப்பறை கதவை திறந்தவுடன் அதன் கீழ்பகுதியில் கோண அளவீடுகள் வரையப்பட்டிருக்கும். கதவு இத்தனை டிகிரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதை மாணவர்களால் அறிய முடியும்.
வகுப்பறை சுவர்களில் தமிழகம், இந்தியா மற்றும் உலக வரைபடங்கள் வரைதல், காலண்டர்கள் எழுத செய்தல் போன்றவையும் மேற்கொள்ளப்படும். தரை பகுதிகளில் கணித கற்றல் வடிவங்கள் ஏற்படுத்தப்படும். இதுபோன்று பல்வேறு கற்றல் செயல்பாடுகள் கட்டிடங்களையும், அது சார்ந்த பகுதிகளையும் மையப்படுத்தி இருக்கும்.
இந்த திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 பள்ளிகளில் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் பொற்றையடி அரசு நடுநிலைபள்ளி, மத்திக்கோடு அரசு தொடக்க பள்ளி, கேசவபுரம், ஆலன்கோட்டை, அண்டுகோடு அரசு நடுநிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில் விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது என்று அனைவருக்கும் கல்வி இயக்க வட்டாரங்கள் தெரிவித்தன.
0 comments:
Post a Comment