Thursday, July 15, 2010

கோழியில இருந்து தான் முட்டை வந்துச்சு

 முட்டைல இருந்து கோழி வந்துச்சா? கோழியில இருந்து முட்டை வந்துச்சா’ன்னு கேட்டு போடுவாங்களே ஒரு புதிரு.. அதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. மிக நீண்..ட ஆராய்ச்சிக்குப் பிறகு, ‘கோழிதான் முதலில் உருவானது.. அதன் பிறகே முட்டை’ என்று பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
முதலில் வந்தது முட்டையா அல்லது கோழியா என்ற குழப்பம் உலக அளவில் இன்று வரை அனைவருக்கும் உள்ளது. இந்தப் புதிருக்கு விடை கண்டுபிடித்து விட்டனர் கோலின்ஃப்ரீமென் தலைமையிலான, ஷெபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். இக்குழுவினர் இந்தக் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் கோழிதான் முதலில் வந்தது என்ற உண்மையை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
இவர்களின் ஆராய்ச்சி உண்மை கணினி மூலம் மிகத் துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஹெக்டார் என்ற மிக உயர்தொழில் நுட்ப கணினி இந்த ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் முட்டை ஓட்டில் உள்ள ஓவோஸ்லீடின் என்ற மிகக் கடினத் தன்மையுடைய புரதச்சத்து கொண்ட மரபணுக்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட போது தனது வேதியியல் பண்பில் இருந்து மாறவில்லை. மாறாக, அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. எனவே முட்டை போடும் நிலையில் உள்ள கோழியின் உடலில் இருக்கும் சத்துக்கள் மூலம்தான் முட்டை ஓட்டுக்குத் தேவையான புரதப் பொருள் உருவாவது கண்டறியப்பட்டது. முட்டை ஓட்டில் உள்ள புரதம், கிரியா ஊக்கியாகச் செயல்பட்டு தன்னுள் இருக்கும் திரவங்களில் உள்ள கால்சியம் கார்போனேட்டை கருவில் உள்ள கோழிக்குஞ்சின் உடலில் கால்சைட் அதாவது சுண்ணாம்புப் படிமங்களாக மாற்றுவதும் தெரியவந்தது.
முட்டைக்குப் பாதுகாப்பான அதன் கடினமான ஓடு உருவான பின்னர்தான் கரு அதனுள் செல்கிறது. முட்டைக்குத் தேவையான புரதம் மற்றும் இதர சத்துக்கள் நிச்சயம் கோழி கொடுத்ததே என்பதால், கோழிதான் முதலில் வந்தது என்று உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.
இனி, சிறுவர்களுக்கு புதிர் போடுபவர்கள் விடையையும் சொல்லுங்கள். ‘கோழியில இருந்துதான்டா முட்டை வந்துச்சு’னு!

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger