சம்பாதிக்கிற பணத்தையெல்லாம் குடிச்சு குடிச்சே ஆண்கள் அழிக்கிறாங்க... ஆனா, அவங்க குடிச்சுட்டு வீசுற பாட்டிலை சுத்தம் செய்து, பெண்கள் கைநிறைய காசு சம்பாதிக்கிறாங்க.
கோவை கூடலூர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சோனா மகளிர் சுய உதவிக்குழுவினர் டாஸ்மாக் பார்களில் காலி மது பாட்டில்களை விலைக்கு வாங்கி சுத்தம் செய்து மது உற்பத்தி நிறுவனங்களுக்கு விற்கும் பணியை துவக்கியுள்ளனர். இதற்காக பாட்டில்கள் சுத்தம் செய்யும் கூடம் நேற்று திறக்கப்பட்டது.
இதுபற்றி மகளிர் குழு கூட்டமைப்பு தலைவி சரோஜினி கூறியதாவது:
ஆண்கள் மதுவில் பணத்தை இழக்கிறார்கள். அதே மதுபாட்டிலை சுத்தம் செய்து நாங்கள் காசு சம்பாதிக்கிறோம். இந்த தொழிலுக்காக வங்கி ரூ.10 லட்சம் கடன் கொடுத்துள்ளது.
குழுவில் உள்ள 10 பேரும் தலா 100 பாட்டில் வீதம் சுத்தம் செய்து தினமும் ஆயிரம் பாட்டில்களை விற்பனைக்கு அனுப்புகிறோம். முதல்நாள் இரவு பாட்டில்களை சோப்பு தண்ணீரில் ஊற வைத்து லேபிள்களை அகற்றுவோம். பின்னர் பாட்டிலின் உள்ளே பிரஷ் மூலம் சுத்தம் செய்து, தண்ணீரில் கழுவி, வெயிலில் காயவைத்து, பெட்டிகளில் அடுக்கி மது ஆலைகளுக்கு அனுப்புகிறோம். காலி பாட்டில்களை குறைந்த விலைக்கு எடுத்து வருகிறோம். பார்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாட்டில்களை எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்தகட்டமாக மேலும் 50 பெண்களை சேர்த்து, தினமும் 60 ஆயிரம் பாட்டில்களை மது ஆலைக்கு சப்ளை செய்ய உள்ளோம்.
தொழிலில் நல்ல லாபம் கிடைக்கிறது. கூடுதல் முதலீட்டுடன் காலி மதுபாட்டில் சுத்தம் செய்யும் ஆலையை அடுத்த ஆண்டில் துவங்குவோம். கோவை மாவட்டத்தில் உள்ள எல்லா பார்களிலும் கிடைக்கும் பாட்டில்களை விலைக்கு வாங்கி தொழிலை அபிவிருத்தி செய்வோம்
1 comments:
Good content India, Please make more of social conscious writing. Anything positive is appreciable. All the best. Sridhar
Post a Comment