மேற்கு வங்க மாநிலம் சைந்தியாவில் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறத்தில் உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் மோதிய விபத்தில் 62 பேர் பலியாயினர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து தேசிய பேரிடர் நிவாரணப் படையைச் சேர்ந்த மீட்புப் படையினர், இறந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பல உடல்கள் ரத்த வெள்ளத்தில் சின்னாபின்னமாக கிடந்தன.
ஒன்றோடு ஒன்று மோதி சிதைந்து கிடந்த பெட்டிகளை கேஸ் கட்டர்கள் மூலம் வெட்டி உடல்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டனர். இந்தக் காட்சிகளை சற்று தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கதறி அழுதனர். இந்த காட்சிகள் காண்போர் மனதை உருக்குவதாய் இருந்தது.
விபத்து நடந்த போது தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் பலர் நடப்பது என்னவென்று தெரியாமலேயே இறந்துள்ளனர். ரயில் மோதி சிதைந்த வேகத்தில் அவர்களது உடல்கள் தூக்கி வீசப்பட்டு கிடந்தன. வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறத்தில் உத்தர்பங்கா ரயில் மோதியதில் வனாஞ்சல் எக்ஸ்பிரசின் கார்டு பலியானார். அவரது ரயிலுக்குப் பின் உத்தர்பங்கா ரயில் மோத வருவதைப் பார்த்து ரயில் நிலையத்தில் இருந்த சிலர் கூச்சலிட்டு கார்டை எச்சரித்தனர். எனினும், பின்னால் ரயில் வருவதைப் பார்த்த கார்டு அதிர்ச்சியில் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நின்றார். விபத்து நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து கொண்டிருந்தபோதே ரயில் மோதி பரிதாபமாக பலியானார்.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரயில் விபத்துக்களில் 259 பேர் பலியாகியுள்ளனர். 2009 மே மாதத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் மீது உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் நேற்று மோதிய விபத்தில் 62 பேர் பலியாயினர். மேற்கு வங்கத்தில் 51 நாள் இடைவெளியில் நடந்துள்ள இரண்டாவது துயர சம்பவம் இது.
கடந்த மே 28ம் தேதி மிட்னாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் குண்டு வைத்து தண்டவாளத்தை தகர்த்ததில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு சில பெட்டிகள் அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. அந்த பெட்டிகள் மீது அதே பாதையில் எதிர் திசையில் வந்த சரக்கு ரயில் மோதியதில் 148 பேர் பலியாயினர். உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி, மேவார் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கோவா எக்ஸ்பிரஸ் மோதியதில் 22 பேர் இறந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கடந்த நவம்பர் 14ம் தேதி மன்டோர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 7 பேர் பலியாயினர். உ.பி.யில் கடந்த ஜனவரி 2ம் தேதி பனி மூட்டம் காரணமாக 2 இடங்களில் ரயில்கள் மோதிக் கொண்டன. அதே நாளில் உ.பி.யில் மற்றொரு ரயில் தடம் புரண்டது. இந்த விபத்துக்களில் 15 பேர் பலியாயினர்.
0 comments:
Post a Comment