Thursday, July 15, 2010

இந்தியர்களுக்குஎதிரான இனவெறி

 இந்தியர்களுக்குஎதிரான இனவெறி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியிருக்கிறது. இந்தியர்களை முட்டாள்கள் என்றும் பொட்டுத் தலையர்கள் என்றும் வர்ணித்த டைம் பத்திரிகை சமீபத்தில்தான் வருத்தம் தெரிவித்தது. இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்காவில், கடையில் பகுதி நேர காசாளராக பணிபுரிந்த இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவை பற்றி சொல்லவே வேண்டாம். இந்திய மாணவர்கள் அங்கு தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது ஆட்களை விட்டு வாகனங்களை அடித்து நொறுக்குவதை வாடிக்கையாக்கி உள்ளனர். அடிலெய்ட் நகரில் இந்திய மாணவர்களின் 3 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது. பைக்குகளில் கும்பலாக வந்த ஆஸ்திரேலிய இளைஞர்கள் இந்தியருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கான இடத்தை இந்திய இளைஞர்கள் பறித்துக்கொள்வதாக ஆஸ்திரேலிய இளைய சமூகம் எண்ணுகிறது. அதன் விளைவே இத் தாக்குதல் என்கின்றனர். இதனால் இனரீதியாக பல வகைகளிலும் இந்திய மாணவர்கள் தொல்லைக்கு உள்ளாகின்றனர். வீட்டு வாசலில் உள்ள கடிதப் பெட்டியில் இருந்து கடிதங்களை திருடுவது, தங்கியிருக்கும் வீட்டுச் சுவர்களில் ஆபாச படம் வரைவது, இனவெறி வாசகத்தை எழுதுவது என ஆஸ்திரேலிய இளைஞர்கள் இவர்களை மனோரீதியாகவும் துன்புறுத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் 4 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். சீனா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஜப்பான் என பல நாடுகளிலும் இருந்து வந்தவர்கள். இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 90 ஆயிரம். ஆஸ்திரேலியர்களின் வெறுப்புக்கு வடஇந்திய மாணவர்களின் செயலும் காரணம் என சொல்லப்படுகிறது. பொது இடங்கள், ரயில், மதுவிடுதி போன்ற இடங்களில் உரக்க பேசுவது, சத்தமாக பாட்டுக் கேட்பது, ஆஸ்திரேலியர்களிடமே உங்கள் கலாசாரம் மோசமானது என விவாதிப்பது போன்ற செயல்களால் வெறுப்புக்கு ஆளாகின்றனர். மிகக் குறைந்த கூலியில் பகுதி நேர வேலைக்கும் போகத் தயாராகின்றனர். ஆஸ்திரேலியாவில் தற்போது வேலைவாய்ப்பின்மை சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இந்த பின்னணிகள் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமாக அமைகிறது.
தொடர் தாக்குதல் சம்பவம் அதிகரித்தபோதும் ஆஸ்திரேலிய அரசு அதை தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய மாணவர்கள் பாதுகாப்பான புறநகர் பகுதிகளுக்கு இடம்பெயர்வது நல்லது என யோசனை சொன்னது. வெளிநாட்டு மாணவர்கள் படிக்க வருவதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கணிசமான அளவு அன்னிய செலாவணியும் அறிவுசார் மனிதவளமும் கிடைக்கிறது. எனவே இந்திய மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியது ஆஸ்திரேலிய அரசின் கடமை.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger