Thursday, July 22, 2010

பூவரசி அழகான பெயர்

 பூவரசி அழகான பெயர். தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதிலும் ஒரே நாளில் பிரபலமாகி கிடக்கிறது. நான்கு வயது பாலகனை துடிக்கத் துடிக்க கொலை செய்து சூட்கேசில் அடைத்து சுமந்து சென்றவரை பெண்ணுலகம் சபிக்கிறது.
நல்ல முறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் தீய வழிக்கு திரும்பாது என்பார்கள். பாசம், பரிவு தெரியாமல் நரக சூழலில் வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் சமுதாய வில்லன்களாக தலையெடுக்கும் என்பார்கள். அந்த மாதிரியான நம்பிக்கைகளுக்கு வேட்டு வைத்திருக்கிறது பூவரசியின் நடவடிக்கை. குடும்ப பின்னணியோ, வளர்ப்போ, படிப்போ குழந்தையை கொல்லும் அளவுக்கு அவர் மனதில் விஷம் ஊற்றெடுக்க தடையாக இல்லை என்பது அனைத்து பெற்றோரையும் கவலைப்பட வைக்கும் உண்மை.
அதே சமயம், எந்த செயலுக்கும் ஒரு எதிர்வினை இருந்தாக வேண்டும் என்கிற அறிவியல் வாதம் இந்த நிகழ்வில் உறுதிப்பட்டுள்ளது. மணமான ஆண்கள் சம்பிரதாயமாக விரிக்கும் சுய பச்சாதாப வலையில் இந்த பெண்ணும் சிக்கியுள்ளார். காமத்தை காதலென நினைத்து இன்னொரு பெண்ணுக்கு துரோகம் செய்திருக்கிறார். வழக்கம்போல் ஏமாந்த பிறகு சுயநினைவு திரும்பி கோபம் கொப்பளித்திருக்கிறது. ஏமாற்றியவனை தண்டிக்க முடியாத கையாலாகத்தனம் எதிர்த்து நிற்க முடியாத குழந்தை மீது கொலைவெறியாக படர்ந்திருக்கிறது. இரண்டு பெண்களுக்கு இழைத்த நம்பிக்கை துரோகத்துக்கு மிகப் பெரிய தண்டனையை அனுபவிக்கிறார் குழந்தையின் தந்தை.
குற்றத்தின் தன்மை எத்தகையதாக இருந்தாலும் அதற்கான தண்டனையை தீர்மானிக்கும் உரிமை குற்றவாளிக்கு கிடையாது. கள்ளக் காதலின் எதிரொலி என்ற பெயரில் வரம்பு மீறிய காம லீலைகள், அதன் விளைவுகள் பற்றி செய்தி வராத நாள் கிடையாது. வஞ்சிக்கப்பட்ட பெண்கள் சமூக அவமானத்துக்கு பயந்து மவுனத்தில் புதையுண்டு போவது பெரும்பாலும் வாடிக்கை. நியாயம் கேட்டு நீதிமன்ற படியேறும் பெண்களை பார்க்க தொடங்கியிருக்கிறோம். அதில் நம்பிக்கை வைக்க முடியாத அளவுக்கு சிந்தனை சிதறும்போது கற்பனையை மிஞ்சும் கொடூரம் நேர்கிறது.
நியாயப்படுத்தவே முடியாத குற்றம் என்றாலும், மாதவி தீயிட்டாலும் மதுரை எரிந்திருக்கும்தானே.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger