Friday, July 16, 2010

மெக்சிகோ வளைகுடா - எண்ணெய் கசிவு அடைப்பு

மெக்சிகோ வளைகுடா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கசிந்து கொண்டிருந்த கச்சா எண்ணெயை, பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவன இன்ஜினியர்கள் போராடி அடைத்து விட்டனர். இதனால் அமெரிக்காவில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோ வளைகுடா பகுதியில் அமைந்திருந்த பிரிட்டிஷ் பெட்ரோலிய (பி.பி) நிறுவன எண்ணெய் கிணற்றில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. அதில் 11 ஊழியர்கள் பலியாயினர். உடைந்த எண்ணெய் கிணற்றின் ஆழ்குழாய்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேரல்கள் வரை கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்து வந்தது. இதனால் அமெரிக்காவின் லூசியானா, டெக்சாஸ், மிசிசிபி, அலபாமா மற்றும் புளோரிடா கடற்கரை பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
கடற்கரைகளில் எண்ணெய் அலைகள் அடித்தன. இப்பகுதியில் உள்ள பெலிகன் நாரைகள் உயிருக்கு போராடின. மீனவர்களின் தொழில் முற்றிலும் பாதிப்படைந்தது. கடலில் மிதந்த எண்ணெயை அகற்றும் பணியில் கடலோர பாதுகாப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தனர். சில இடங்களில் எண்ணெய் ஒன்றாக திரட்டப்பட்டு, நடுக்கடலிலேயே தீ வைத்து கொளுத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படைந்ததால், எண்ணெய் ஊற்றை அடைக்கும் பணியில் முழுவீச்சில் செயல்படும்படி பிரிட்டிஷ் பெட்ரோலிய(பி.பி) நிறுவனத்தை வற்புறுத்தினார் அமெரிக்க அதிபர் ஒபாமா. கடலின் மேல்மட்டத்திலிருந்து ஒரு மைல் ஆழத்துக்கு கீழே உள்ள ஊற்றை அடைக்க பி.பி.நிறுவன இன்ஜினியர்கள் போராடினர். நீர்மூழ்கி ரோபோக்களின் உதவியுடன் எண்ணெய் கிணறு குழாயின் வால்வுகளை அடைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுக்கமான அடைப்பானை கொண்டு எண்ணெய் கிணறு குழாயின் மூன்று வால்வுகள் வெற்றிகரமாக நேற்று இரவு அடைக்கப்பட்டன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பி.பி. நிறுவன துணை தலைவர் கென்ட் வெல்ஸ், ‘‘மெக்சிகோ வளைகுடா பகுதியில் தற்போது எண்ணெய் கசிவு நிறுத்தப்பட்டு விட்டது. இதை 2 நாட்கள் கண்காணிக்க வேண்டியுள்ளது’’ என்றார். இத்தகவல் அமெரிக்க மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger