ரயில்களில் வழங்கப்படும் உணவை சாப்பிடுவது போன்ற கொடுமை வேறு இருக்க முடியாது. அதிக கட்டணம் கொடுத்து வாங்கும் இந்த உணவு கைப்பிடி அளவுக்கு அவ்வளவு குறைவாக இருக்கும். தரத்தை பற்றி கேட்கவே வேண்டாம். பரிமாறும் முறை அதைவிட பயங்கரம். டாய்லெட் பக்கத்தில் எல்லாம் சாப்பாட்டு தட்டை அடுக்கி வைத்திருப்பார்கள். ரயில் உணவு குறித்து பல காலமாக பயணிகள் புகார் தெரிவித்து வந்த வண்ணம் இருக்கின்றனர். சமீபத்தில் டெல்லியில் இருந்து எர்ணாகுளம் வரும் துரந்தோ ரயிலில் உணவு சாப்பிட்ட 21 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
தரமற்ற உணவு குறித்த பயணிகளின் குற்றச்சாட்டை ரயில்வே நிர்வாகம் இப்போது காது கொடுத்து கேட்கத் தொடங்கிவிட்டது. பயணிகளின் குறைகளை போக்கும் வகையில், புதிய உணவு வினியோகிக்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி ரயில்களில் சமையல் அறை மற்றும் சப்ளை செய்யும் முறைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. உணவு பரிமாற பயன்படுத்தப்படும் தட்டு, பாத்திரம் போன்றவற்றை நடைபாதையிலும் கழிப்பறை அருகிலும் அடுக்கி வைப்பதை தடுக்கவும், பாத்திரங்களை கழுவுவது, சமைப்பது என அனைத்திலும் மிகுந்த கண்காணிப்புடன் தரத்தை மேம்படுத்தவும் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
ரயில்களில் இப்போது இருக்கும் உணவு சமைக்கும் அறை சிறிதாக உள்ளது. இதனால் குறுகிய இடத்திலேயே எச்சில் பாத்திரங்களை வைப்பது, அதன் அருகிலேயே சமைத்த உணவை வைப்பது போன்ற சுகாதாரக் கேடுகள் இருந்தன. இப்போது இந்த அறையை பெரிதுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இடப்பற்றாக்குறை நீங்கும். சமைக்கும் அறையும் சுத்தமும் சுகாதாரமுமாக இருக்கும். மேலும் பயணிகளுக்கு உணவு பரிமாற குறைந்த எடை கொண்ட தள்ளுவண்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் பாதையில் உணவுப் பொருள் சிந்துதல் உள்ளிட்ட குறைகள் நீக்கப்படும். விரைவாகவும் பரிமாற உதவும்.
புதிய உணவு வினியோக திட்டத்தின்படி, ரயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் நவீன உபகரணங்களுடன் கூடிய சிறிய சமையல் அறை அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. தானியங்கி உணவு வழங்கும் மையங்களை அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.
ரயில் பயணிகளின் நெடுநாள் குறையை தீர்க்க ரயில்வே நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.
தட்கல் டிக்கெட் முறையிலும் பல மாற்றங்கள் செய்து வரும் ரயில்வே துறையை
பாராட்டாமல் இருக்க முடியாது.
அதே நேரத்தில் பயணிகளின் பாதுகாப்பில் இன்னும் அக்கறை செலுத்தினால்,
சமிப காலமாக தொடந்து நடைபெற்று வரும் ரயில் விபத்துக்களை தடுக்கலாம்.
ரயில் சிக்னல்களை இன்னும் நவீன படுத்தலாம் அல்லவா?
0 comments:
Post a Comment