Monday, August 2, 2010

காடுகளை அழிக்கிறான் மனிதன்

 விலங்குகளின் வசிப்பிடங்கள் சுருங்கிக் கொண்டே போகின்றன. காரணம் மனிதனின் ஆக்கிரமிப்பு ஆசை. காடுகளை, மலைகளை அழித்து வீடுகளாகவும் சொகுசு ஓய்விடங்களாகவும் மாற்றி வரும் மனிதனின் பேராசைக்கு யானை, சிறுத்தை, குரங்குகள் என வன விலங்குகள் பலியாகி வருகின்றன.
ரயிலில் அடிபட்டு சாகும் யானைகள், பயிர்களை காப்பதற்காக போடும் மின்வேலியில் சிக்கி சாகும் யானைகள் என தினமும் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டேதான் இருக்கிறது. தந்தங்களுக்காக வேட்டையாடப்படும் யானைகள் கணக்கு தனி. சமீபத்தில் மின்சார டிரான்ஸ்பார்மரில் தும்பிக்கை பட்டு, யானை ஒன்று பரிதாபமாக பலியாகி இருக்கிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை வனச்சரகம் அத்திக்கடவு, பில்லூர் வனப்பகுதிகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன. யானை கூட்டம் ஒன்று நள்ளிரவில் உணவு, தண்ணீர் தேடி அத்திகடவு முகாம் பகுதிக்கு வந்துள்ளது. இப்பகுதிகளுக்காகவும், பிற பகுதிக்கும் மின்சாரம் கொண்டு செல்ல டிரான்ஸ்பார்மர் உள்ளது. யானைக்கூட்டத்தில் இருந்த ஒரு பெண் யானை டிரான்ஸ்பார்மர் இருக்கும் பகுதியில் புகுந்தது. அங்குள்ள மரக்கிளையை பிடிக்க துதிக்கையை உயர்த்தியபோது எதிர்பாராதவிதமாக டிரான்ஸ்பார்மரின் மேல் உள்ள உயர்அழுத்த மின்சார மின்கம்பியில் யானையின் துதிக்கை பட்டது. மின்சாரம் தாக்கி அதே இடத்தில் யானை பரிதாபமாக பலியானது.
திருப்பதி மலையில் அலிபிரி மலைப் பாதையில் சிறுமியை சிறுத்தை தாக்கிய சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. ஒரே வாரத்தில் நடந்த இரண்டாவது சம்பவம் இது. இரு தினங்களுக்கு முன்பு இதே போல் ஒரு சிறுமியை தாக்கிய சிறுத்தை, காட்டுக்குள் தப்பியோடி விட்டது. முதன்முறை மனித ரத்தத்தை ருசி பார்த்த அதே சிறுத்தைதான் தொடர்ந்து இதுபோல் தாக்கி வருவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.
காடு வழியாக ரயில் பாதை, நெடுஞ்சாலை, காட்டை ஒட்டி ரிசார்ட்கள் அமைப்பது என காடுகளை அழிக்கிறான் மனிதன். இதனால் விலங்குகளுக்கு தண்ணீர், உணவு கிடைப்பது தடைபடுகிறது. அவற்றை தேடி மனிதன் இருக்கும் பகுதிக்குள் அவை நுழைகின்றன. இதனால் பயிர் அழிகிறது. கண்ணில் படும் மனிதர்களையும் தாக்கி கொல்கின்றன. அவரவர் இடத்தில் இருந்தால் பிரச்னை இல்லை. ஆக்கிரமிக்கும்போதுதான் அழிவு நிச்சயமாகிறது.

1 comments:

எஸ்.கே said...

நல்ல பதிவு!

Related Posts with Thumbnails
 

Blogger