மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் (ELECTRONIC VOTING MACHINE) தில்லுமுல்லு செய்ய முடியுமா என்ற கேள்வி மறுபடியும் கிளம்பியிருக்கிறது. முடியும் என்று பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டி ‘நிரூபித்த’ ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டதால் சந்தேகம் பரவ தொடங்கியுள்ளது.
ஹரி பிரசாத் ஆந்திராவை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர். நேர்மையான தேர்தலை வலியுறுத்தும் ‘விட்டா’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். இவரும் அமெரிக்க பல்கலைக்கழக கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர் ஒருவரும், பிறருடைய கம்ப்யூட்டர்களில் ஊடுருவி ரகசியங்களை அம்பலப்படுத்தும் நெதர்லாந்து ஜித்தர் ஒருத்தரும் கூட்டணி அமைத்திருக்கின்றனர். நோக்கம்: இந்திய ELECTRONIC VOTING மிஷினில் மோசடி செய்யமுடியும் என நிரூபிப்பது.
பல நாடுகளில் நீண்டநாள் முன்பே ELECTRONIC VOTING MACHINE அறிமுகமானது. குளறுபடிகள், தில்லுமுல்லுகள் நடந்ததால் அதை ஓரங்கட்டிவிட்டு ஓட்டுச்சீட்டு முறைக்கு திரும்பி விட்டனர். அல்லது, இவிஎம்மோடு ஓட்டுச்சீட்டும் வைத்திருக்கிறார்கள். புகார்கள் வந்தால் ஒப்பிட்டு பார்க்க வசதியாக. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்ற கோஷத்துடன் இந்தியா இவிஎம்முக்கு மாறியபோது உலகமே திரும்பி பார்த்தது. செலவில்லாத சிறிய எந்திரம். இணைப்புகள் ஏதுமில்லை. சாதா பேட்டரியில் இயங்கும். பெரிய புரோகிராம் எதுவும் கிடையாது. தில்லுமுல்லு செய்ய வாய்ப்பில்லை.
வாய்ப்பு இருக்கிறது என அடித்துச் சொன்ன கட்சிகளுக்கு அதை நிரூபிக்க வாய்ப்பளித்தது தேர்தல் கமிஷன். யாராலும் முடியவில்லை. இன்று 13 லட்சம் இவிஎம்களுடன் மின்னணு வாக்குப்பதிவில் உலகின் நம்பர் ஒன் நாடு இந்தியா.
இந்த பின்னணியில் பரபரப்பாக டெமோ கொடுத்துள்ளார் ஹரி. அதில் அவர் பயன்படுத்திய இவிஎம் மும்பை அரசு குடோனில் திருடப்பட்டது என தேர்தல் கமிஷன் புகார் கொடுக்க, ஹரி கைதானார். ஒரு எந்திரத்தை திறக்க முடிந்தால் உள்ளிருக்கும் எதையும் மாற்ற முடியும். திறக்கவே வாய்ப்பில்லாத சூழலில் தில்லுமுல்லு சாத்தியமில்லை.
ஹரியை விடுவித்து, சர்வகட்சி தலைவர்கள் முன்னிலையில் அவர் டெமோ கொடுக்கவும் அதை பொதுமக்கள் பார்க்க நாடெங்கும் நேரடியாக ஒளிபரப்பவும் தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்ய வேண்டும். நேர்மை எப்போதும் சோதனைகளுக்கு அஞ்சுவதில்லை.
0 comments:
Post a Comment